மாமனிதர் டாக்டர் அப்துல்கலாம் – நடிகர் சிவகுமார் புகழாரம்

kalam-sivakumar

2010 – செப்டம்பர் 21-ந்தேதி செவ்வாய் கிழமை டாக்டர் அப்துல்கலாம் அவர்களை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு தனியார் டிவிக்காக பேட்டி எடுத்தேன்.

அவர் பிறப்பு, கல்வி, அறிவியல், அணுசக்தி துறையில் அவரது சாதனை, குடியரசுத் தலைவராக ஒரு தமிழர் அமர்ந்த பெருமிதம் – என பல நூல்களிலிருந்து குறிப்புகள் எடுத்து , 10 பக்கங்கள், கேள்வி – பதில் வடிவில் அவருக்கு ஈ- மெயிலில் அனுப்பி வைத்தேன்.
கலாம் அவர்கள் சிறு வயதில் காலை 4 மணிக்கு குளியல் – அடுத்து கணித வகுப்பு -5.30-க்கு வீடு – தொழுகை – 6 மணிக்கு ரயில் நிலயம்- ஓடும் ரயிலிலிருந்து வீசியெறியப்படும் தினமணி – சுதேசமித்திரன்- பத்திரிக்கைகளை பிரித்து ராமேஸ்வரத்தில் வீடு வீடாக விநியோகம்- 8.00 மணிக்கு பழையதை உண்டுவிட்டு பள்ளி – இரவு, 2 மணி நேரம் படிக்க மட்டும் விளக்கில் எண்ணெய் வசதி. விடுமுறை நாட்களில் அண்ணன் மளிகைக் கடையில் பணி. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி விடுதியில் மாதம் 4 ரூ மிச்சப்படுத்த சைவ உணவுக்கு மாறி இன்று 84- ஐ கொண்டாடும் வயதிலும் சைவம்.

குடியரசுத்தலைவர் மாளிகையில் ரம்ஜான் – இப்தார் விருந்துச்செலவு 2.50 லட்சத்தை அப்படியே அனாதை விடுதிக்கு நன்கொடையாக வழங்கினார்.

அமெரிக்காவிலிருந்து ஜார்ஜ் புஷ் டெல்லி வருகையை முன்னிட்டு இங்கு மாளிகை வராந்தா கம்பளங்களை மாற்ற கேட்டபோது, மகான்களின் பாதம் பட்ட கம்பளத்தில் உங்கள் அதிபரின் பாதம் படுவது பெருமை என்று மாற்ற மறுத்தார்.

ஊரிலிருந்து டெல்லி சுற்றிப் பார்க்க வந்த உறவுகளின் செலவுக்கு கையிலிருந்து பணம் கொடுத்தார். பதவி காலம் முடிந்து மாளிகையை விட்டு வெளியேறும்போது கையில் இரண்டு சிறுபெட்டிகள், ஒரு பையில் , தான் காசு கொடுத்து வாங்கிய சில நூல்கள்….

எளிமையும் நேர்மையுமாய் என் இதயத்தில் இடம்பிடித்த மாமனிதர்- “யான்’ ‘எனது’ என்னும் செறுக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்’ – என்ற குறளைச் சொல்லி. என் கம்பன் உரையையும் ஓவியங்களையும் பார்த்து, என்னைப் பாராட்டிய போது, அந்தக் குறளின் முழுமையான அர்த்தத்துக்கு நம்மை இன்னும் தகுதியானவனாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று ஆழ்மனம் சொல்லியது !!

Share