
விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தில், பிரபல இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் எழுதி, இசையமைத்து பாடிய பாடலுடன், அவரே நடனமாடிய ப்ரமோஷனல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கியுள்ள ‘லவ் மேரேஜ்’ திரைப்படத்தில், விக்ரம் பிரபுவுடன், ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ பட புகழ் நடிகை சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், நடிகர் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்க, ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை பரத் விக்ரமன் கவனிக்க, தயாரிப்பு வடிவமைப்பை எம். முரளி மேற்கொண்டுள்ளார். கிராமிய பின்னணியில் உருவாகியுள்ள இந்த குடும்ப அம்சமான திரைப்படத்தை அஸ்யூர் பிலிம்ஸ் – ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ளனர்.
வரவிருக்கும் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து, இப்படத்தில் இடம்பெற்ற ‘கல்யாண கலவரம்’ எனும் முதல் பாடலும், அதன் ப்ரமோஷனல் வீடியோவும் வெளியாகியுள்ளது. பாடலாசிரியரும் இசையமைப்பாளருமான ஷான் ரோல்டன் எழுதி, பாடியுள்ள இந்த உற்சாகமான பெப்பி பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும், இப்படத்தின் டீசர் மற்றும் பிற புதிய அப்டேட்டுகளை விரைவில் வெளியிடப் போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Social