வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடித்த விடுதலை 1 படம் எப்படி இருக்கு ?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடித்த விடுதலை 1 படம் எப்படி இருக்கு ?

விடுதலை-I
===========
நன்று.

ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை (1992ல் ஆனந்த விகடனில் வெளியானது) தழுவி எடுத்த படம் என்று சொல்லபட்டாலும் இந்த முதல் பாகத்தில் நக்சல் பின்புலம் தவிர அதற்கான எந்தச் சாயையும் இல்லை. சொல்லப் போனால் இது கதைக்கு நேர் எதிராக நக்ஸல் ஆதரவு கொண்ட படம்.

1987ல் கதை நடக்கிறது. எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் (1980) நக்சல்களைப் பிடிக்க வால்டர் தேவாரம் தலைமையில் நடத்தப்பட்ட ஆபரேஷன் அஜந்தா (நக்சல்களின் குண்டுவெடிப்பில் இறந்த இஸ்பெக்டரின் மகள் பெயர்) இந்தப் படத்தில் ஆபரேஷன் கோஸ்ட் ஹண்ட் ஆகி இருக்கிறது. அதோடு 1990களில் வீரப்பன் தேடுதல் வேட்டையில் வாச்சாத்தி உள்ளிட்ட பல கிராமங்களின் மீது ஏவப்பட்ட காவல்துறை அட்டகாசங்களையும் சேர்த்துத் திரைக்கதை எழுதியுள்ளனர். இரண்டுமே வட தமிழ்நாடு என்பதால் தர்க்கம் பொருந்துகிறது. (அசுரன் போல் வெண்மணியை வெக்கையுடன் வலிந்து இணைக்கவில்லை.)
தருமபுரி படத்தில் அருமபுரி ஆகி இருக்கிறது. கு.கலியபெருமாளை நினைவூட்டும் பெருமாள் என்ற நக்சல் தலைவர் பாத்திரம். ஒரு காட்சியில் நாயகியின் பெயர் கேட்டு போலீஸ்காரர்கள் அடிக்கிறார்கள். அவள் தமிழரசி என்கிறாள். “அதான்” என்கிறது போலீஸ். அதாவது நக்சல் தலைவர் தமிழரசனைக் குறிக்கிறார்கள்.

இத்திரைப்படம் ஒரு நாவலின் தன்மை கொண்டிருக்கிறது. நாவல்தான் ஒரு நிகழ்வில் தொடர்புடைத சகலத் தரப்பும் என்ன செய்கிறது, நினைக்கிறது என்ற மனவோட்டத்தைப் பதிவு செய்ய முயலும். மாறாக, இந்தியாவில் சினிமா பெரும்பாலும் ஒற்றைத்தன்மை வாய்ந்தது. ஒரு குரலைத்தான் ஹீரோ, வில்லன் இருவருமே ஒலிப்பார்கள். இப்படத்தில் நக்சல் தரப்பு, தேடுதல் வேட்டையில் உள்ள போலீஸ் தரப்பு, இருவருக்கும் இடையே உள்ள பொதுமக்கள் தரப்பு, அரசுத் தரப்பு என எல்லாமும் நன்கு பதிவாகி உள்ளது.
எளிமையான திரைக்கதை. முக்கியமான விஷயம் படம் நக்சல்கள் பற்றிய ஒரு பொதுப்புத்தி / வலதுசாரித்தன எதிர்மறைப் பார்வையில் தொடங்கிப் பின் மெல்ல அவர்கள் பக்கத்து நியாயத்தைப் பேச ஆரம்பிக்கிறது. பார்வையாளனிடம் அதே மனமாற்றத்தை உத்தேசித்தே இந்த உத்தி கையாளப் பட்டிருக்கிறது. தனிப்பெருங்கருணை பாடல் ஒலித்து முடித்ததும் போலீஸ் ஒருவனைச் சுட்டுக் கொல்கிறது – இது போல் சில காட்சிகள் படத்தைச் சுவாரஸ்யமானதாக்குகின்றன.
எனக்குப் படத்தில் பிடித்தது மூன்று விஷயங்கள்: 1) நாயகனின் அறம், 2) நாயகன் நாயகியின் காதல், 3) படத்தின் பிற்பகுதியில் நாயகன் மனதுள் உண்டாகும் முரண் (conflict). மூன்றுமே அற்புதம்! குறிப்பாக அத்தனை இக்கட்டிலும் அவனது அசையாத நேர்மை தமிழ் சினிமாவின் தனித்துவமான பாத்திரமாக ஆக்கி விடுகிறது.
இப்படி எல்லோரையும் பிடித்து போலீஸ் சித்ரவதை செய்தால் கோர்ட் சும்மா விடுமா எனக் கேள்வி எழலாம். 1985ல் ராஜீவ் ஆட்சியில் தீவிரவாதச் செயல்களுக்காகக் கொண்டு வரப்பட்ட தடா (TADA) சட்டத்தில் எல்லாம் சாத்தியம். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் ஜுடீஷியல் மாஜிஸ்ட்ரேட் முன்பு கொண்டு போக அவசியமில்லை. ஒரு வருடம் வரை விசாரணைக் கைதியாக வைக்கலாம். குற்றத்துக்குத் தனியே ஆதாரம் இல்லாவிடினும் குற்றவாளியின் வாக்குமூலமே போதுமானது. அச்சட்டம் இந்தியா முழுக்கவும் போலீஸ்காரர்களுக்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு அரக்க பலம் வழங்கியது. கதை அக்காலத்தில் நடக்கிறது. (ராஜீவ் கொலை வழக்கு இந்தச் சட்டத்தின் கீழ்தான் விசாரிக்கப்பட்டது.)
சூரியும் நாயகி பவானிஸ்ரீயும் நல்ல நடிப்பு. சேத்தன் உள்ளிட்ட பல போலீஸ்காரர்களும் சிறப்பு. கௌதம் மேனன் வழக்கம் போல் என்றாலும் ராஜீவ் மேனன் மிளிர்கிறார். (அவர் எம்ஜிஆரை சூப்பர் பாஸ் என்று சொல்வதை மட்டும் சகிக்க வேண்டும்.) விஜய்சேதுபதி அதிகபட்சம் ஐந்து நிமிடம்.
காட்டுமல்லி, உன்னோட நடந்தா – இரண்டு பாடல்களும் பொருத்தமான இடங்களில் அமைந்து மனதை அள்ளுகின்றன. பின்னணி இசையிலும் இளையராஜா பிரமாதப்படுத்தி இருக்கிறார். ஏற்கெனவே வந்த மூன்று பாடல்களோடு ஒரு பெண் குரலிலும் இளையராஜா குரலிலும் வரும் ஒற்றை வரி ஆராரிரோ பாடல் முதன்மைப் பாத்திரத்தின் அலைக்கழிப்பை அடிக்கோடிடுகிறது. ஒளிப்பதிவு நன்று. குறிப்பாக நெடிய ரயில் கவிழ்ப்புக் காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்ட விதம்.
ஜெய் பீம், விசாரணை, டாணாக்காரன், கர்ணன் ஆகிய படங்களின் சாயை இதில் நிறைய இருக்கிறது. வாச்சாத்தி என்ற படமும் நினைவுக்கு வரக்கூடும் (நான் பார்த்ததில்லை). காவல்துறையின் சித்ரவதைக் காட்சிகள் (குறிப்பாகப் பெண்கள் மீது) நிறைய உண்டு.
நிச்சயம் பார்க்கலாம். திரையரங்கில்.
  • சி.சரவணகார்த்திகேயன் பதிவிலிருந்து..

Watch Viduthalai – Part 1 Public Review

video :

 

விடுதலை 1

#Vetrimaaran’s #Viduthalai – Part 1
starring #Soori and #VijaySethupathi
Bankrolled by RS Infotainment and Grassroot Film Company, Viduthalai which also stars #GauthamVasudevMenon, #Prakashraj and #BhavaniSre has music scored by #Ilaiyaraaja and cinematography by #Velraj.
#RSInfotainment #ViduthalaiPart1 #Jayamohan #RedGiantMovies #ViduthalaiPart2

Share