கவிஞர் கலாப்ரியாவுக்கு வாழ்நாள் சாதனை விருது!

கவிஞர் கலாப்ரியாவுக்கு வாழ்நாள் சாதனை விருது!

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் இலக்கிய விருது 2022க்கான பரிசளிப்பு விழா டிசம்பர் 10 அன்று சனிக்கிழமை மாலை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள முத்தமிழ்ப் பேரவை – ராஜாரதனம் கலை அரங்கத்தில் நடைபெற்றது.

கவிஞரும் எழுத்தாளருமான கலாப்ரியா அவர்களுக்கு 2022 க்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர்கள் அ. மார்க்ஸ், யுவன் சந்திரசேகர், பா. ராகவன், இரா. முருகன், மாலன், தேவேந்திரபூபதி, கவிஞர் யவனிகா ஸ்ரீராம், சந்தியா பதிப்பகம் நடராஜன், வழக்கறிஞர் சுமதி, ஸீரோ டிகிரி பப்ளிஷிங் பதிப்பாளர்கள் ராம்ஜி, காயத்ரி ஆகியோர் இணைந்து கலாப்ரியாவிற்கான நினைவுப் பரிசையும், ஒன்றரை லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் அளித்தனர்.

முன்னதாக கலாப்ரியாவின் அமர்வில் வழக்கறிஞர் சுமதி, சந்தியா பதிப்பகம் நடராஜன், தேவேந்திர பூபதி, யவனிகா ஸ்ரீராம் ஆகியோர் கலாப்ரியாவின் படைப்புலகம் குறித்தும், அவருடனான தங்கள் நினைவுகள் குறித்து உரையாற்றினர். இறுதியாக கலாப்ரியா ஏற்புரை வழங்கினார். தன் கவிதைகளில் தென்படும் சசி பற்றியும், தான் கவிதை எழுத வந்த காலத்தைப் பற்றியும், வானம்பாடி, கசடதபற இதழ்கள் தன் இலக்கிய வாழ்வில் செய்த பங்களிப்பு பற்றியும், தன் முன்னோடிகள் மற்றும் சமகாலத்தில் எழுத வந்தவர்கள் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் சார்பாக நடத்தப்பட்ட சிறுகதை, குறு நாவல், நாவல் போட்டிக்கான பரிசுகள், நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. ஸீரோ டிகிரி இலக்கிய விருத்துக்காக தேர்வு செய்யப்பட்ட 10 சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு, 6 குறு நாவல்கள் அடங்கிய குறுநாவல்கள் தொகுப்பு, நாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 நாவல்கள் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் சார்பாக வெளியிடப்பட்டது.

நாவல் போட்டியில் கொம்பேறி மூக்கன் நாவலுக்காக இறுதிப்பரிசை வென்ற மெளனன் யாத்ரிகா ஏற்புரை வழங்கினார்.

ஸீரோ டிகிரி பதிப்பாளர் ராம்ஜி புதிதாக எழுத வருபவர்களுக்கான அங்கீகாரம், ஊக்கத்திற்கான தேவையையும், இம்மாதிரியான இலக்கியப்போட்டிகள் தரும் வெளிச்சத்தையும் குறிப்பிட்டுப் பேசினார். ஸீரோ டிகிரி பதிப்பகம் செயல்படுவதற்கு காரணமான எழுத்தாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியை ஸீரோ டிகிரி பப்ளிஷிங், JMB மோட்டார்ஸ், ரெப்ரோ இந்தியா, தமிழரசி அறக்கட்டளை, நாகர்கோவில் ஆர்யபவன் ஆகியோர் இணைந்து நடத்தினர்.

 

 

Share