சில நேரங்களில் சில மனிதர்கள் – திரை விமர்சனம்

சில நேரங்களில் சில மனிதர்கள் – திரை விமர்சனம்

சில நேரங்களில் சில மனிதர்கள்
இயக்கம் – விஷால் வெங்கட்
நடிகர்கள் – நாசர், அசோக் செல்வன், மணிகண்டன், ரித்விகா, பிரவீன்

சில நேரங்களில் சில மனிதர்கள் தமிழில்
வந்திருக்கும் ஒரு அருமையான சினிமா அனுபவம்.

ஒரு விபத்து வாழ்வின் வெவ்வேறு முனைகளில் இருக்கும் நால்வரின் மனங்களிலும் குணங்களிலும் ஏற்படுத்தும் மாற்றங்களும் அதனை சுற்றி நடக்கும் சம்பவங்களும் தான் கதை.

நால்வர் வாழ்க்கை, ஒரு ஹைபர் லிங் கதை போல ஆரம்பித்து அந்த உணர்வுபூர்வமான பயணத்தில் நம்மையும் இழுத்து சென்று நமக்குள்ளும் சில மாற்றங்களை அழுத்தமாய் விதைத்திருக்கிறார்கள்.

அசோக் செல்வன் தாயை இழந்து தந்தையுடன் வாழும் நடுத்தர இளைஞன். கல்யாணம் வைத்துவிட்டு அதன் பரபரப்பில் இயங்கி கொண்டிருப்பவன், நல்லமனம் இருந்தாலும், எப்போதும் எல்லோரிடத்திலும் எரிந்து விழுந்துகொண்டிருப்பவன் தான் சொல்வதை கேட்க வேண்டும் என்று நினைப்பவன்.

மணிகண்டன் ஒரு ரிசார்ட்டில் ரூம் மேனேஜ்மெண்ட் க்ளீனிங் பொறுப்புகளை செய்து கொண்டிருக்கும் ஏழை இளைஞன், சொல்லும் வேலையை பொறுப்பில்லாமல் செய்து விட்டு, அடுத்தவர் மேல் குற்றம் சொல்பவன், தனக்கான அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்கவில்லை என நினைப்பவன்.

அபிஹாசன் ஒரு பிரபல இயக்குநரின் மகன், நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய முதல் படத்தில் நடித்து அதன் வெளியீட்டுக்காக காத்திருப்பவன், தான் மட்டுமே நன்றாக சிந்திப்பவன், உலகம் வேறு போக்கில் தப்பாக இயங்குவதாக நம்புவன் அப்பாவின் அனுபவத்தை மதிக்காதவன்.

பிரவீன் ஐடியில் வேலை பார்க்கும் திருமணமான இளைஞன், ஆன்சைட்டில் வேலைக்கு செல்ல காத்திருப்பவன். பணமும் பகட்டும் தான் உலகின் தனக்கு மதிப்பை அளிக்கும் என நம்புகிறவன். எப்போதும் தன் மதிப்பு குறையக்கூடாது யாரிடமும் உதவி கேட்க கூடாது என நினைப்பவன்

இவர்கள் நால்வரில் வாழ்வையும் ஒரு விபத்து பாதிக்கிறது. அவர்களின் மனங்களை குணங்களை எப்படி மாற்றுகிறது என்பதே படம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அழுத்தமான உணர்பூர்வமான திருப்தியை தருகிறது படம். மிக நேர்த்தியான திரைக்கதை. சினிமாவுக்கான எந்த பூச்சும் இல்லாமல் அவ்வளவு அழகாக வாழ்க்கைக்குள் புகுந்து நம்மை கட்டிப்போட்டிருக்கிறார்கள்.
மெயின் பாத்திரங்களாக வருபவர்கள் மட்டுமல்லாது படத்தில் வரும் ஒவ்வொரு சின்ன பாத்திரங்கள் கூட அசத்தியிருக்கிறார்கள்.
அசோக் செல்வன் எப்போதும் எரிந்து விழும் இளைஞன், ஏண்டா இவன் கத்திகிட்டே இருக்கான் என தோணுச்சுனா அவர் ஜெயிச்சிருக்கார். மணிகண்டன் பொறுப்பில்லா ஏழை இளைஞன் பாத்திரத்தில் அப்படியே பொருந்தியிருக்கிறார். தெருவில் கட்டிப்புரளுமிடத்திலும், குற்றவுணர்வில் தவிக்கும் இடத்திலும் மிரட்டிவிடுகிறார். இவரெல்லாம் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.
அபிஹாசன் இவருக்குள் இத்தனை திறமையா என ஆச்சர்யப்பட வைக்கிறார். இக்கால இளைஞனை அச்சு அசலாக பிரதிபலித்திருக்கிறார். பிரவீன் மற்றுமொரு அற்புதம் ரித்விகாவிடம் அவர் சரண்டராகும் இடம் அழகு. நாசர் நடிப்பையெல்லாம் தனியாக சொல்ல வேண்டுமா?

அசோக் செல்வனின் நண்பனாக வருபவர், அவரது காதலி, கே எஸ் ரவிகுமார், அவரது உதவியாளர் என படத்தில் கொஞ்ச நேரம் வருபவர்கள் கூட அசத்தியிருக்கிறார்கள்

படம் முழுக்க பல தருணங்கள் நம் கண்களையும் நனைக்கிறது அதை விட நாம் என்னென்ன செய்கிறோம் என நமக்கே பாடம் எடுக்கிறது. முதல் படத்திலேயே இத்தனை நுண்னுணர்வுடன் ஒரு படமா என வியக்க வைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட்.
எங்கோ கடல்ல கரைஞ்சிருக்க உப்பு ஒரு நாள் நம்ம குழம்ப ருசியாக்கும்னு கனவா கண்டோம், குத்தமே செய்யாம அதுக்கான பழிய வாங்குறவனுக்கு தான் அதோட வலி தெரியும், ஒருத்தன் எல்லாருக்கும் நல்லவனா இருக்கவே முடியாது, நீ தப்பு செய்யலனா அத எல்லாருக்கும் நீரூபிக்க வேண்டிய அவசியம் இல்ல என படத்தின் ஒவ்வொரு வசனத்திலும் அதிரவைக்கிறார் மணிகண்டன்.
படத்திற்கு மிகப்பெரும் பலமாக ரதனின் இசை நிற்கிறது. ஒளிப்பதிவில் காட்சியின் அழகை விட உணர்வை படமாக்க்கியிருகிறார் மெய்யேந்திரன் மொத்தமாக ஒரு அழகான உணர்வுபூர்வமான பயணம் இந்த சில நேரங்களில் சில மனிதர்கள் தவறவிடக்கூடாத சினிமா.

 

 

  • கதிர்
Share