கவிஞர் மனுஷ்ய புத்திரனின் குதிரையேற்றம்

கவிஞர் மனுஷ்ய புத்திரனின் குதிரையேற்றம்

குதிரையைப் பார்க்கும் போதெல்லாம் நம் எல்லோருக்கும் அதில் ஏறி சவாரி செய்ய வேண்டும் என்கிற ஆசை நிச்சயம் பிறக்கும். அவ்வாறு ஆசை இருந்தாலும் அதற்கான வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடாது. பலர் பயந்து ஒதுங்கினாலும் சிலர் பீச்சில் குதிரை ஏறியிருப்பார்கள்; இப்போது சிலர் தங்கள் திருமண ஊர்வலத்தில் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

 

அந்த வகையில் தமிழ் இலக்கிய உலகுக்கு நன்கு பரிச்சயமான கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஓர் ஓவியம் மூலம் குதிரை ஏறியிருக்கிறார். கவிதை வரிகளால் எத்தனையோ பேரின் கனவுகளுக்கு வடிவம் கொடுத்த அவரது கனவு இன்று வண்ணங்களுடன் வடிவமாகி பலரை நெகிழச் செய்துள்ளது.

 

அவர் நடப்பதுபோலக் கனவு கண்டதாக அவருக்கு நெருக்கமான நண்பர்கள் பலர் அடிக்கடி கூறும் போதெல்லாம் புன்னகையுடன் கடந்து வந்திருக்கிறார். அதுபோக, புல்லட் வாகனத்தை வேகமாகச் செலுத்திச் செல்வதுபோல தனக்கும் அடிக்கடி கனவு வருவதாக கவிஞரும் குறும்புடன் பகிர்ந்துள்ளார்.

 

இந்த நிலையில், ஒரு கல்யாண குதிரையை சக்கர நாற்காலியிலிருந்து பிடித்துக்கொண்டிருக்கும் கவிஞரது புகைப்படம் ஓவியர் ரவியை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. அதை வைத்து, கவிஞர் மனுஷ் ஒரு குதிரையில் காற்றை விட வேகமாக தன்னந்தனியாகப் பறப்பதுபோல் அவர் வரைந்துள்ள ஓவியம் அனைவரையும் ஈர்த்துள்ளது. அந்த ஓவியம் கண்டு நெகிழ்ந்த கவிஞர் மனுஷ் அதை ஒட்டி ஒரு கவிதை எழுதி அதை ஓவியர் ரவிக்கும் சமர்ப்பணம் செய்துள்ளார்.

கவிஞர் மனுஷ்ய புத்திரன் ஓவியருக்கு சமர்ப்பணம் செய்த கவிதை பின்வருமாறு.

சித்திரக் குதிரையேற்றம்
………………………………………..

கால்களில்லாத இளவரசனை
புரவியிலேற்றி அனுப்ப
விரும்பினான் சித்திரக்காரன் ஒருவன்

புரவியேறும் கனவில்
வாழ்நாளெல்லாம்
தூங்காதிருந்த
கால்களற்ற இளவரசன்
லாயத்துக் குதிரைகளின்
கடிவாளங்களை தினமும் முத்தமிட்டு
கண்ணீர் சிந்தினான்
அந்த துக்கம் சித்திரக்காரனையும்
மனம் உடையச் செய்துவிட்டது

காதலின் உன்மத்தவேகம் கொண்ட
சித்திரக் குதிரையொன்றை
இரவெல்லாம் தீட்டி முடித்தான்
கால்களற்ற இளவரசனுக்காக

நிஜக்குதிரைகள் போலல்ல
சித்திரக் குதிரைகள்
அவை செல்லும் வேகம்
ஒரு சொல்லின் வேகத்தைவிடவும் அதிகம்
மனதின் வேகத்தைவிடவும் அதிகம்
அவன் இழந்த நடை அனைத்தும்
சித்திரக் குதிரையின் கால்களில்
பாய்ந்து பெருகியது
அவனது உடைந்த கனவுகளின் பாழ்நிலங்களை
அந்தக் குதிரை மின்னலென கடந்து சென்றது

சித்திரக்குதிரையிலேறி
மேகக்கூட்டங்களினூடே
செல்லும் கால்களற்ற இளவரசனை
ஒரு அதிசயம் போல
அன்ணாந்து பார்க்கின்றனர்
ஊர் மக்கள்
கால்களற்ற மனிதர்கள் எது செய்தாலுமே
அது ஆச்சரியம்தான்

பாதிவழியில் திரும்பிப்பார்த்த
கால்களற்ற இளவரசனுக்கு
அப்போதுதான் உறைத்தது
தனக்குப்பின்னால்
இளவரசி இல்லையே என்று

இளவரசியற்ற இந்த பயணம்
பாதிப்பயணமே எனும் துக்கம் மேலிட
குதிரையின் வழியை திசை மாற்றி
சித்திரக்காரனிடம் பாய்ந்து சென்று
’ ஏனிந்த அநீதியை இழைத்தாய் ?’ என்றான்
கண்கள் சிவக்க

சித்திரக்காரன்
கால்களற்ற இளவரசனை
சமாதானம் செய்தான்
’ நீ இப்பிறவியில்
தனித்திருந்து சண்டையிட்டு
அழிய விதிக்கபட்டவன்
சண்டைக் குதிரைகளின் பின்னே
இளவரசிகள் அமரமாட்டார்கள்’

4.7.2020
மாலை 5.27
மனுஷ்ய புத்திரன்

 

சாத்தியமற்றதை சாத்தியமாக்குவதுதானே கலை. அவ்வாறு, ரவி வரைந்த இந்த ஓவியம் பலரது கனவை சாத்தியப்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

 

 

Share