கலை வழி கற்றல் – கலை வழி கற்பித்தல் | சீனிவாசன் நடராஜன்

கலை வழி கற்றல் – கலை வழி கற்பித்தல் | சீனிவாசன் நடராஜன்

முனைவர் கவிஞர் வெண்ணிலா அவர்களின் முனைவர்பட்ட ஆய்வு நூலை முன்வைத்து பேசுவதற்கு எத்தனையோ செய்திகள் எனக்கு இருக்கிறது.

ஒரு சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

ஆய்வுக்காக அவர் எடுத்துக் கொண்ட பொருள்

தேவரடியார்களின் கல்வி.

சங்ககாலம் தொட்டு இன்றுவரை சுமார் 1200 ஆண்டுகளாக நமக்கு கிடைக்கப்பெற்ற சான்றுகளின் வழி தேவரடியார்கள் வாழ்ந்து வந்திருப்பதை இந்நூல் ஆய்ந்து சொல்கிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களுக்கு இருந்த பெயர்களை இலக்கியத் தரவுகள், வெளிநாட்டினரின் பயணக்குறிப்புகள், கல்வெட்டு, செப்பேடு சாசனங்கள், தமிழக கோவில்களில் உள்ள சிற்பங்கள், ஓவியங்கள், களஆய்வு, நேரடியான தேவரடியார்களை
கண்டு இதற்குமுன் எழுதப்பட்ட நூலாசிரியர்களிடம் தெரிந்துகொண்ட தரவுகள் என ஆதாரங்களை முன்வைத்து தேவரடியார்களின் பெயர்கள், வகை, காலம், கல்வி, சமூகமைப்பில் அவர்களுடைய பங்கு என விரிவாக பதிவு செய்திருக்கிறார்.

ராஜதாசி என்போர் அரண்மனையில் அரசனுக்கு முன்பாக ஆடல் பாடல் இசை கலைகளை நிகழ்த்தியவர்கள் என்றும், தேவதாசிகள் என்பவர் கோவில்களில் இறைவனுக்கு ஆடல் பாடல் இசை கலைகள் மூலம் சேவைகள் செய்தவர்கள் என்றும் இருவேறு வகையாக தேவரடியார்கள் வாழ்ந்ததை வெண்ணிலா பதிவுசெய்திருக்கிறார்.

தேவதாசிகள்
கூத்திகள்
மாணிக்கதார்
ருத்ரகணிகையர்
வெள்ளாட்டிகள்
தளிச்சேரிபெண்டுகள்
பதியிலார்
தலைக்கோலி
நக்கன்
அடுக்களைப்பெண்டுகள்

என தேவரடியார்கள் பல்வேறு பரிமாணங்களில் வெவ்வேறு பயன்பாட்டுப் பெயர்கள் தாங்கி வாழ்ந்ததை ஆதாரத்தோடு விளக்குகிறது இந்த புத்தகம்.

தேவரடியார்கள் கிராமக்கோவில்கள், பெருந்தெய்வ கோவில்கள், அரசவை கோவில்கள், புனிதத் தலங்கள் என அன்றிருந்த ஒவ்வொரு படிநிலை கோவில்களுக்கும் வெவ்வேறு விதமான சேவைகளை செய்ததை தெரிந்துகொள்ள முடிகிறது.

குறிப்பாக குடமுறைதாசி என்பவர் இறைவனுக்கு பூரணகும்பம் எடுப்பவர் அவர்தான் தாசிகளில் மிகவும் மரியாதைக்குரியவர் என்றும் அவர்களுக்குள் இருந்த படி நிலையை தெளிவாக விளக்குகிறார்.

நித்திய பூசைய, மாதாந்திர பூசை, வருடாந்திர பூசை என அவர்கள் செய்துவந்த கைங்கரியத்தை தெளிவாக சொல்கிறது இந்த புத்தகம்.

சைவ-வைணவ மரபோடு இணைந்த தேவரடியார் வாழ்வியல் எவ்வாறெல்லாம் சமய கல்வியோடு இணைந்து கலை வளர்த்தது என்பதையும் வெண்ணிலா ஆதாரங்களோடு எழுதியிருக்கிறார்.

தேவரடியார்கள் கோவில்களுக்கு எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்ந்து விடப்படுகிறார்கள் என்பதற்கு வீரராஜேந்திரன் கிபி 1063 காலத்தை சேர்ந்த திருவெற்றியூர் கோவில் சாசனம் ஆதாரமாக நிற்பதை சுட்டிக்காட்டி தேவரடியார்கள் சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டே நேர்ந்து விடப்படுகிறார்கள் என்பதை சொல்கிறது இப்புத்தகம்.

இலக்கியத்தில் கணவனால் கைவிடப்பட்ட புனிதவதியார் என்ற காரைக்கால் அம்மையார் தன்னை திருவாலங்காட்டு கோவிலுக்கு இறை பணிக்காக நேர்ந்து விட்டு கொள்கிறார் என்பதிலிருந்து அவர்களாகவே முன்வந்து நேர்ந்து விட்டுக் கொள்ளும் பழக்கம் இருந்தது
என்று ஆய்வின் வழி புரிந்துகொள்ள முடிகிறது.
இப்படி திலகவதியார், ஆண்டாள் நாச்சியார், மங்கையர்க்கரசியார், நீலாதேவி போன்றவர்கள் தங்களை கோவில்களுக்கு இறைப்பணி ஆற்ற அற்பணித்ததை இந்தப் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

இப்படி திருக்கோவில் சேவைக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள பெண்கள் தன்னார்வத்துடன் வந்தார்கள் என்பதை 1099 ஆம் ஆண்டு ஆவணம்திருவக்கரை கோவில் வழி நின்று பதிவுசெய்கிறது.

பலர் தங்களை குடும்பத்துடன் கோவிலுக்கு விற்றுக் கொண்ட ஆவணங்களும் கிடைத்திருக்கிறது 948 ஆண்டு சந்திரசேகர் என்பவர் தன்னுடைய மூன்று பெண்களையும் விற்றிருக்கிறார் என சாசனம் சொல்கிறது.

நூற்றுப் பத்து காசு கடனுக்காக தன்னையும் தனது இரு மகள்களையும் கூட கோவில் மடத்துக்கு ஒருவர் விற்றுக் கொண்ட மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்து ஆவணம் சான்றுரைக்கிறது.

பெண்கள் தாங்களாகவே முன் வந்தும் நேர்ந்து விட்டுக் கொள்ளும் தேவரடியார்களாக இருந்தார்கள் என எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு சாதாரணப் பெண் தேவரடியார் ஆவதற்கான விதம் பற்றி விரிவாகவே இந்த ஆய்வு பேசுகிறது.

தேவரடியார் மரபுக்கு புராண காலத்து நம்பிக்கைகளும் நமக்கு கிடைக்கின்றன. இந்திர சபையில் சாபம் பெற்று பூமியில் பிறக்கும் ஊர்வசி காஞ்சிபுரத்தில் பிறந்து மிகச்சிறந்த நடன மங்கையாக வாழ்ந்தார் என சுத்தானந்தபிரகாசம் என்னும் பரத நூல் கூறுகிறது. இப்படி தேவரடியார்கள் அவர்களுடைய தோற்றம் அவர்களுக்கு வழங்கப்பட்ட பெயர்கள் அவர்களுடைய அன்றாடப் பணிகள் கலை கல்வி என்று விரிவாக சான்றுகளுடன் பதிவுசெய்கிறது வெண்ணிலாவின் ஆய்வு.

தஞ்சை ஆபிரகாம்பண்டிதரின் கருணாமிர்தசாகரம், ராசமாணிக்கனாரின் சைவ சமய வளர்ச்சி, ஏக்கர்தர்ஸ்டனுடைய தென்னிந்திய குலங்களும் குடிகளும், பிஎம் சுந்தரத்தின் மரபு தந்த மாணிக்கங்கள், நர்மதா அவர்களின் தமிழகத்தில் தேவரடியார் மரபு பன்முக நோக்கு, முருகேசனின் வரலாற்றில் தேவதாசிகள், தமிழ் இசை இலக்கிய இலக்கண வரலாறு மூ.அருணாச்சலம் எழுதியது, நாகசாமி சந்திரமூர்த்தி இணைந்து எழுதிய தமிழ் கோயிற்கலைகள், கலைக்கோவன், சதாசிவன் போன்றவர்களின் நூல்களை அவர்களுடைய ஆய்வுகளை மேற்பார்வையிட்டு தனக்கான ஆய்வின் பல்வேறு சான்றுகளையும் பார்வைகளையும் திரட்டியே வெண்ணிலாவின் இவ்வாய்வு தொடர்ந்திருக்கிறது. இதன் வழியே தேவரடியார்களின்
கல்வி, அவர்கள் கற்றறிந்த விதம், தேவரடியார்களுக்கு கற்பித்தோர், கல்வி போதிக்கும் அமைப்பு போன்ற பகுதிகளை ஆய்வில் விடுபட்டுப் போன பகுதிகளாக கண்டறிந்து மீண்டும் வரலாற்றை தேடி ஆய்வினை மேற்க்கொண்டிருக்கிறார் வெண்ணிலா.

தேவதாசிகளின் கல்விமுறையை இளங்கோ அடிகளின் சிலப்பதிகார கதாபாத்திரமான மணிமேகலை அறிமுகம் படலத்தில் ‘அவள் கற்றறிந்தவர்’ என்று சொல்வதிலிருந்து ஆடல், பாடல், இசை ஆகிய மூன்று கலைகளும் கற்றறிந்தார் என்பதிலிருந்து நாம் தேவதாசிகளின் கல்விமுறையை அணுகவேண்டும் என்பது வெண்ணிலாவின் கூற்றாக இருக்கிறது.

தமிழகத்தில் கிபி இரண்டாம் நூற்றாண்டிலிருந்து நமக்கு கிடைக்கும் தமிழ் பிராமி கல்வெட்டுகளில் காணப்படும் ஆதாரங்களிலிருந்து பண்டைய தமிழ் சமூகத்தில் எழுத்தறிவும் கற்றுத்தரும் அமைப்புகளும் இருந்ததை பார்க்க முடிகிறது கூடவே அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், இசைக்கலைஞர்கள், மருத்துவர்கள், கணியர்கள், மலர்கொய்பவர்கள், குயவர்கள் என பல பிரிவினரும் புலவர்களாக இருந்ததிலிருந்து சங்க கால கல்வி நிலையினை அறிய முடிகிறது என்று சொல்லும் வெண்ணிலா தமிழ் சமூகம் கல்வியறிவோடு இருந்ததை சொல்லி தொல்காப்பியர் காலத்தில் பெண்கள் கல்வி கற்றுயிருந்ததை சான்றாக சுட்டிக்காட்டுகிறார், கூடவே குல பெண்கள் கல்வி கற்பது குலத்திற்கு நல்லதல்ல என்ற நம்பிக்கையை முன் வைத்து கற்றறிந்த பெண்கள் பத்தொன்பதாவது நூற்றாண்டு வரை தேவதாசிகளே என்று நிறுவுகிறார்.

இன்று நமக்கு கீழடி கொடுத்திருக்கும் சான்று கிறிஸ்து பிறப்பதற்கு முன் அறநூறு என்று தமிழ் பிராமியின் காலம் வெளியிடப்படுகிறது, 1968ல் அன்றைய தமிழ் தொல்லியல் துறையில் இருந்த நாகசாமி கொற்கை என்ற ஊரில் தாமிரபரணி ஆற்று முகத்துவாரத்தில் அகழ்வாய்ந்து கி.மு.730 என்று சான்றுடன் வெளியீட்டிருக்கிறார்.

தேவதாசிகளின் கல்வியில் நாடகக் கணிகையர் பற்றி குறிப்பும், பின்பு சோழர்காலத்தில் ஆடல் கலைஞர்கள் குடியிருந்த இடங்களை தளிச்சேரி என்ற குறிப்புச் சொல்லும் கல்வி அமைப்புகள் இருந்ததை சுட்டிக்காட்டுகின்றன.

திண்ணைப் பள்ளிக்கூடங்கள், சமண பௌத்த கல்வி சாலைகள், கடிகைகள், மடங்கள் தொடர்ந்து ஐரோப்பிய கல்வி அமைப்புகள் என்ன கல்வி கற்பிக்கும் அமைப்புகள் இருந்ததைப் பதிவு செய்யும் வெண்ணிலா தேவரடியார்கள் கல்வி வரலாற்றை இதன்வழி நின்று ஆய்ந்து சொல்கிறார்.

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தை துணைக்கு அழைக்கும் இந்த ஆய்வு நூல் சிலப்பதிகாரத்தில் இருந்த ஆசிரியர்கள் பலரையும் குறிப்பாக அரங்கேற்று காதையில் குறிப்பிடப்படும் இயலாசிரியர், இசையாசிரியர், குறளாசிரியர் என்பன போன்ற வகைப்பாடுகளை வகைப்படுத்தி தேவதாசிகளின் கற்றல் முறையில் இருந்த ஆசிரியர் சிறப்பை விளக்குகிறார்.
அதுபோல இருவகை கூத்து என்பது அகக்கூத்து எனவும் புறக்கூத்து எனவும் வேத்தியல் பொதுவியல், சாந்தி வினோதம் எனவும் குறிப்பிடுகிறார்.
வெண்ணிலா அவைகளை
சொக்கம்
மெய்க்கூத்து
அபிநயக்கூத்து
நாடகம்
சாக்கைக்கூத்து
ஆரியக்கூத்து
தமிழ்கூத்து
(இங்கே தமிழ் கூத்து கும்பகோணம் மானம்பாடி நாகநாத சாமி கோவிலில் உள்ள கல்வெட்டு அக்கோவிலின் சித்திரைத் திருவிழாவில் தமிழ்குத்து 5 நாட்கள் நடைபெற்றதை ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்து கல்வெட்டு குறிப்பிடுகிறது.)

விநோதக்கூத்து என்று நட்டுவனாறும் இசையாசிரியரும் முறையே நடன இசைக் கலைஞர்களில் ஒத்திசையோடு பயிற்றுவித்து அரங்கேற்றப்பட்ட கூத்துகளை பட்டியலிடுகிறது இந்த புத்தகம்.

தேவரடியார்கள் பெரிதும் அறியப்பட்ட பெயர்களாக ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகள் வேரோடி நின்றதை கலைகளோடு கல்வி கேள்வியோடு எழுச்சி பெற்றதை விரிவாக ஆராய்ந்து சொல்லும் வெண்ணிலா ஒரு சில தேவரடியார்களை குறிப்பிட்டுப் பேசுகிறார் ஆதாரங்களுடன், அவர்களின் முதல் பெயர் முதலாம் ராஜேந்திர சோழனின் அவையில் அரசவை நாட்டிய பெண்ணாக இருந்த பரவை நங்கை. அவரைத் தொடர்ந்து திருப்பூவணம் என்னும் ஊரில் புகழ்பெற்ற தேவரடியாராக இருந்தவர் கிபி 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொன்னையால், தொடர்ந்து கிபி 878 பிறந்த பெங்களூர் நாகரத்தினம்மாள், 19ஆம் நூற்றாண்டில் வீணை தனம்மாள், என்று பதிவு செய்யும் வெண்ணிலா கூடவே தேவரடியார்கள் எழுச்சியையும் வீழ்ச்சியையும் எழுதி காட்டுகிறார்.

தேவரடியார் பெண்கள் கீதம், வாத்தியம், நிருத்தியம் மூலம் இறை சேவை செய்யவே கோவில்களுக்கு நேர்ந்து விடப்பட்டார்கள் இம்மூன்றையும் தேவரடியார் பெண்கள் அவசியம் கற்றிருக்க வேண்டும் அடிப்படையில் தேவரடியார் பெண்கள் வாழ்க்கை, கற்றலுடன் தொடர்பு கொண்டதாகவே இருக்கிறது என்று சொல்லிச் செல்லும் வெண்ணிலா இந்தக் கூற்றை நிறுவுவதற்கு ஒரு சான்றை முன்வைக்கிறார், தமிழர்களுடைய கலை என்பது நடனம், இசை, ஓவியம், சிற்பம் ஆகியவை உருவாகி வளர்ந்து வந்ததை கலை மரபு என்று வகுத்துக்கொண்டு அந்த சான்றினை முன்னெடுக்கிறார் வெண்ணிலா, ஓவியத்தை மிகப் பழமையான கலை என்று சொல்லி கிறிஸ்து பிறப்பதற்கு முன் 500 ஆண்டுகள் முற்பட்ட காலத்தை அதனினும் பின்னோக்கி பாறை ஓவியங்களை குகை சுவர்களில் வரையப்பட்ட எழுத்துக்களை சான்றாக வைத்து ஓவியத்தை கலைகளின் மூதாதையர் கலை என முடிவுக்கு வருகிறார் வெண்ணிலா.
ஒவ்வு, ஓவு என்னும் சொற்களிலிருந்து ஓவியம் என்னும் சொல் உருவானதாக சொல்லி இச்சொல்லின் பொருள் ஒன்றைப் போலவே இருத்தல் அல்லது ஒத்திருத்தல் என்று மதுரை காஞ்சியைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். நாட்டியப் பெண்களுக்கும் ஓவியத்திற்கும் இருக்கும் தொடர்பை மணிமேகலையை கொண்டு சான்று உரைக்கும் வெண்ணிலா குறுந்தொகை வரிகள் மூலம் சித்திரக்காரர்கள் என்றால் எழுதுபவர்கள் என்று நிறுவி இதன் வழியாக நான்கு கலைகளிலும் தேர்ச்சி பெற்ற பெண்கள் அவர்களுடைய கலைமரபு அதுவே தமிழனின் கலை மரபு என்று இந்த ஆய்வில் நிறுவுகிறார். குறிப்பாக பெண்கள் கல்வியில் குடும்பப் பெண்கள் கல்வி கற்பது மரபல்ல என்பதை விளக்கி சொல்லி தேவதாசிப் பெண்கள் தான் கல்வி கலைகளில் தேர்ச்சி பெற்று விளங்கினார்கள் என்றும் தேவதாசிப் பெண்கள் வழியாகவே நமக்கு கல்வியும் கலைகளும் தொடர் சிந்தனைகளும் மரபுவழி இன்றும் தழைத்தோங்க காரணமாக இருக்கிறது என நிறுவி இந்த ஆய்வின் வழி நின்று நிறுவுகிறது இந்நூல்.
சமயம், கடவுள், வழிபாடு, அதில் கலைகள், கலைகளின் வழி தேவதாசி சமூகம் என்று ஆய்ந்து செல்லும் இந்தப் புத்தகம் இறுதியில் தேவரடியார் கலைமரபு தமிழ் கலை மரபு என்று நிறுவுகிறது.

தேவதாசி பெண்களின் வீழ்ச்சி அல்லது சட்டம் கொண்டு தேவதாசி முறையை ஒழித்தது, தற்கால சமூகம் தமிழனின் தொல் மரபான கலை வழிக்கற்றல் முறையைக் கைவிட்டு இன்று இருக்கும் கலாச்சார சீரழிவுக்கும் சமூக கேட்டிருக்கும் வழிவகுத்தது என்றும் இன்று நாம் பண்பாட்டு வீக்கத்தை எதிர்கொள்ள நேர்ந்ததின் விளைவை நேரடியாக வெண்ணிலாவின் ஆய்வு தேவதாசி பெண்களின் கல்வி என்ற நிலையில் நின்று சாடுகிறது.

தேவரடியார் பெண்களின் ஆளுமை திறனை தொன்று தொட்டு பல தேவரடியார் பெண்களை முன்வைத்து இவ்வாய்வு மேற்சொன்ன பண்பாட்டு சிதைவை விளக்குகிறது, உதாரணமாக சங்ககாலத்தில் மகளிர் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு துள்ளி ஆடிய கூத்து துணங்கை இதுபோலவே சிறந்த நாட்டிய பெண்ணுக்கு தலைக்கோலி என்ற பட்டம் வழங்கப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார், அரசர்கள் படையெடுத்துச் செல்வதற்குமுன் பாணினி ஆநிரைகளைக் கவர்தல் படைக்கு முன்சென்று பாடியதை குறிப்பிடும் வெண்ணிலா நச்செள்ளையார், அவ்வையார் என தேவரடியார் பெண் ஆளுமைகளை குறிப்பிடும் வழியில் கிருஷ்ணதேவராயரின் சின்னாதேவியையும் குறிப்பிடுகிறார். போலவே பக்தி இயக்க காலத்தில் வாழ்ந்த திருஎருக்கத்தம்புலியூர் நங்கை அவருடைய இசை ஞானத்தை குறிப்பிடும் வெண்ணிலா ஆளுமைகளை எடுத்துக்காட்ட தற்காலத்தில் பாலசரஸ்வதி கும்பகோணம் பாலாமணி அம்மாள் என்றொரு பட்டியலை முன்வைக்கிறார்.

தேவதாசி ஒழிப்புச் சட்டம் 1947 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது அரசியல் காரணங்களுக்காக நாடுமுழுவதும் தேவரடியார் முறைக்கான தடை அமுல்படுத்தப்பட்டது மூவலூர் ராமாமிர்தம் முத்துலட்சுமி ரெட்டி.
ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.

இந்த ஆய்வு நூல் சமகாலத்தில் 1500 ஆண்டுகளாக தமிழ் பேசும் மக்களிடம் இருந்த பண்பாட்டுச் செல்வங்களை கலை வழிக்கற்றல் முறையை
70 ஆண்டுகளில் இழந்து நிற்பதன் வலியை ஆவணங்களுடன் கடத்துகிறது.

முனைவர் அ வெண்ணிலா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

Share