அமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில்  – பெருமாள் முருகன்

அமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில் – பெருமாள் முருகன்

எழுத்தாளர் பெருமாள் முருகன் நவீனத் தமிழ் இலக்கியக்கத்தில் தமிழ்நிலம் சார்ந்த மக்களுக்கான இலக்கியம் படைப்பதில் தனி முத்திரை பதித்தவர். கல்வித்துறையில் அவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர். நவீன இலக்கியம், பழந்தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த பயிற்சியும் புலமையும் கொண்டவர். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எனத்தொடர்ந்து இயங்கி வருபவர். கொங்கு நாட்டுச் சொல்லகராதியைத் தொகுத்து வெளியிட்டவர். தேர்ந்த திறனாய்வாளராகவும் தம் பங்கைச் செலுத்தி வருபவர். இவர் ஏற்கனவே பல அமைப்புகளின் விருதுகளையும் சிறப்புகளையும் பெற்றவர். தென்கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் இருக்கும் பல்வேறு அமைப்புகளின் அழைப்பை ஏற்று, பன்னாட்டு எழுத்தாளர் உறைவிட முகாம்களில் பங்கேற்றுப் படைப்புகளைப் படைத்து தமிழுக்குப் பெருமை சேர்த்து வருபவர். அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவில் இருக்கும் ‘ஆர்ட் ஓமி’ எனும் அமைப்பின் அழைப்புக்கிணங்க, அவர்கள் நடத்தி வரும் பன்னாட்டு எழுத்தாளர் உறைவிட முகாமில் பங்கேற்றுச் சிறப்பித்து வருகின்றார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த செப்டம்பர் 10ஆம் நாள் முதல் 17ஆம் வரையிலும் இடம் பெற்ற புரூக்ளின் புத்தகத் திருவிழாவிலும் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களது அமர்வு வெகுசிறப்பாக இடம் பெற்றது. ’ஒன் பார்ட் வுமன்’ எனும் பெயரில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட அவருடைய ‘மாதொரு பாகன்’, ‘பூனாச்சி’ ஆகிய படைப்புகள் விழாவில் கலந்து கொண்டோரின் கவனத்தை ஈர்த்தன.

மாதொருபாகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு, அமெரிக்காவின் ‘நேசனல் புக் அவார்டு’ எனும் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கான பத்துத் தலைப்புகளில் ஒன்றாக இடம் பெற்றிருக்கின்றது. 1936ஆம் ஆண்டு துவக்கம் இவ்விருதினை வழங்கி வரும் அமைப்பான நேசனல் புக் பவுண்டேசன் அமைப்பின் இவ்வாண்டுக்கான தெரிவு எதிர்வரும் அக்டோபர் பத்தாம் நாள் வெளியாகவுள்ளது. ஒன் பார்ட் வுமன் தெரிவாகக்கூடுமென்கின்ற ஆவலில் தமிழ் வாசகர்களும் ஆர்வலர்களும் இருக்கின்றனர்.

புரூக்ளின் புத்தகத் திருவிழாவில், திராவிட மொழியான தமிழின் எழுத்தாளரெனப் பெருமாள் முருகன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியதன் வாயிலாக, பன்னாட்டு அறிஞர்கள், வாசகர்கள் குழுமியிருந்த அந்த அவையில் தமிழுக்குச் சிறப்புச் செய்யப்பட்டதாக அது அமைந்தது. தமிழிலேயே உரையைத் தொடர, வழக்கறிஞர் கனிமொழி அவர்கள் எழுத்தாளரின் உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பேசினார்.

பன்னாட்டு எழுத்தாளர் உறைவிட முகாம் முடிவடைந்த பிறகு, எழுத்தாளர் பெருமாள் முருகன் கலந்து கொள்ளும் தமிழ் வாசகர் சந்திப்பு, இலக்கியவுரை நிகழ்ச்சிகள், கனெக்டிக்கட், நியூஜெர்சி, வாசிங்டன் டி.சி, நியூயார்க் முதலான இடங்களில் நடைபெறவுள்ளன. அதற்கான ஏற்பாடுகளை, அமெரிக்காவிலிருக்கும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களும் எழுத்தாளரின் துவக்ககாலப் புனைபெயர்களில் ஒன்றான ‘இளமுருகு’ எனும் பெயரில் அமைந்திருக்கும் இளமுருகு வாசகர் வட்டத்தினரும் செய்து வருகின்றனர்.

-பழமைபேசி.

Share