ட்ரெய்லர் பார்த்து படத்தை எடை போடாதீர்கள் : நடிகை சதா பேச்சு !

ட்ரெய்லர் பார்த்து படத்தை எடை போடாதீர்கள் : நடிகை சதா பேச்சு !

விஜய் நடித்த ‘தமிழன் ‘பட இயக்குநர்  அப்துல்  மஜீத்  இயக்கியுள்ள படம்  ‘டார்ச் லைட்’ . இது பாலியல் தொழிலாளி பற்றிய கதை என்கிற பரபரப்பு நிலவி வருகிறது .
‘டார்ச் லைட் ‘படம் சார்ந்த பத்திரிகையாளர்  சந்திப்பு சென்னையில் நடைபெற்றது .
அப்போது படம் பற்றி நாயகி சதா பேசினார். அவர் பேசும் போது , ” நான் சற்று இடைவெளிக்குப்  பின் தமிழில் நடித்திருக்கிறேன். இடையில் தெலுங்கு , இந்தி என்று நடித்தேன். நல்லதொரு கேரக்டருக்காக தேர்ந்தெடுத்து நடிக்க விரும்பியதால் இந்தத் தாமதம் நேர்ந்தது. ‘டார்ச் லைட் ‘படத்தின் கதையை இயக்குநர் மஜீத் என்னிடம் ஒரு முறை சொன்னார். கதை பிடித்தது. ஆனால் என்னால் உடனே முடிவெடுக்க முடியவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் கேட்டேன். அப்போதும் அவர் அதே தெளிவோடு கூறினார். என்னால் எதுவும் சட்டெனக் கூற முடியவில்லை . சரியாக வருமா நம்மால் முடியுமா என்கிற எண்ணம் இருந்தது .மஜீத் என் மேல் நம்பிக்கை வைத்தார். உங்களால் முடியும் என்று ஊக்கம் தந்தார். நடிப்பது என்று முடிவெடுத்து விட்டேன். இது மாதிரி பாலியல் தொழிலாளியாக நடிக்கப் பலரும் தயங்கவே செய்வார்கள். காரணம் படத்தின் பாத்திரத்தை பாத்திரமாகப் பார்க்கும்  பக்குவம்  பலருக்கும்  இருப்பதில்லை.
அது தான் பிரச்சினை . என்னைப் பார்க்கிறவர்கள் எல்லாருமே முதலில் இதைத்தான் கேட்கிறார்கள். என்னை படத்தில் சதாவாகப் பார்க்காதீர்கள். பாத்திரமாகப் பாருங்கள்  என்பதே என் பதில் . ட்ரெய்லர் பார்த்து விட்டு கேள்வி கேட்கிறார்கள். ட்ரெய்லர் , போஸ்டர் பார்த்து விட்டு படத்தை முடிவு செய்யக் கூடாது. அட்டைப் படத்தைப் பார்த்து விட்டு ஒரு புத்தகத்தை முடிவு செய்ய முடியாது அல்லவா ?. ட்ரெய்லரில் சில வினாடிகள் உள்ள வசனங்கள் பற்றிக் கேட்கிறார்கள். சர்ச்சையாக இருக்கிறதே என்கிறார்கள். படம் பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள்.
இது பாலியல் தொழிலில் சிக்கிய பெண்கள் பற்றிய கதை தான். அவர்கள் அந்தத் தொழிலுக்கு விரும்பி வருவதில்லை. ஆடம்பர வாழ்க்கைக்கோ , பெரிய பணத்துக்கோ ,சந்தோஷத்துக்கோ  என்று வருவதில்லை . குடும்ப வறுமை சூழலில்  வருகிறார்கள். இந்தத் தொழிலில் ஆண்கள் சம்பந்தப்பட்டாலும் கெட்ட பெயரெல்லாம் பெண்களுக்குத்தா ன். அவர்களின் வலி , வேதனை , துன்பம் ,துயரம் , மன அழுத்தம்  யாருக்கும் தெரிவதில்லை. அதைத்தான் இதில் பதிவு செய்திருக்கிறார்  இயக்குநர் . படப்பிடிப்பின் பெரும் பகுதி அவுட்டோரில் நடைபெற்றது. அதுவும் லைவ் லொக்கேஷன்களில்  நடைபெற்றது . அங்கிருந்த யாருக்கும் நாங்கள் சினிமா எடுப்பது தெரியாது. அப்படிப்பட்ட இடங்களில் கேமரா பொசிஷன் பார்த்து நானும் கூட்டத்தில் கலந்து நடிக்க வேண்டும். இது ஒரு சவால் தான் இருந்தும் நடித்தேன்.
ஒரு முறை அப்படி நடித்த போது ஹீரோ என்னைத் தள்ளிவிட்டார். கீழே விழுந்து என் முட்டியில் அடிபட்டு காயம் ஏற்பட்டது.
மொத்தத்தில் பல வகையிலும் எனக்கு இது மறக்க முடியாத படம்.” இவ்வாறு சதா பேசினார்.
இயக்குநர் அப்துல் மஜீத் பேசும் போது “இது பாலியல் தொழிலாளி பற்றிய கதைதான் ஆனால் செக்ஸ் படமல்ல. இதை பல நடிகைகளிடம் கூறினேன். ஆனால் யாரும் நடிக்க வரவில்லை. சதா மட்டுமே முன்வந்தார். அவர் கதையை மீண்டும் மீண்டும் கேட்டு தெளிவு பெற்றார், அதன் பிறகு தயக்கத்தை விட்டு விட்டு நடிக்கத் தயாராகி விட்டார்.  அந்தக் கதாபாத்திரத்துக்குள் நுழைந்து விட்டார். பிரமாதமாக நடித்துள்ளார்.
படம் எடுத்த பின் சென்சாரில் நாங்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ரிவைஸிங்  கமிட்டி போய்த்தான் சர்டிபிகேட் பெற வேண்டியிருந்தது.  ஏராளமான வெட்டுகள்  கொடுத்தார்கள். சினிமாவில் சென்சார் பெரிய பிரச்சினையாக உள்ளது. அவர்களுக்குச் சினிமா மொழி புரிவதில்லை. சென்சாரில் தணிக்கைக் குழுவில் சினிமாத்துறையினர் நாலைந்து பேராவது இருக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்  இப்படம் செப்டம்பர் 7ல் அதாவது நாளை வெளிவருகிறது. ” என்றார்.
நிகழ்ச்சியில் நாயகன் வருண் உதய் , ஒளிப்பதிவாளர்  சக்திவேல் , இசையமைப்பாளர் ஜேவி , படத்தில் நடித்துள்ள இயக்குநர் சி.ரங்கநாதன் ஆகியோரும் பேசினார்கள்,
‘டார்ச் லைட் ‘படத்துக்கு ஒளிப்பதிவு – சக்திவேல் , இசை – ஜேவி, பாடல்கள்- வைரமுத்து , எடிட்டிங் -மாரீஸ் , கலை -சேகர் , நடனம் – சிவராகவ் , ஷெரீப் . தயாரிப்பு அப்துல் மஜீத் , எம். அந்தோனி எட்வர்ட் , ரங்கநாதன் ராஜு, கண்ணன் பாஸ்கர்
சதா ,ரித்விகா, வித்தியாசமான நடிப்பில் புதுமுகம் வருண்உதய் ,தினேஷ் குமார்,இயக்குநர் வெங்கடேஷ் ,சுஜாதா .இயக்குநர் ரங்கநாதன் , சரவண சக்தி. மற்றும் பலர் நடித்துள்ளனர்
Share