சவரக்கத்தி – படம் எப்படி ?

சவரக்கத்தி – படம் எப்படி ?

இயக்கம் : ஆதித்யா
நடிப்பு : மிஷ்கின்
ராம்
பூர்ணா
ஒளிப்பதிவு : கார்த்திக் வெங்கட்ராமன்
படத்தொகுப்பு : ஜூலியன்
இசை : ஆரோல் கோரெல்லி
தயாரிப்பு : மிஷ்கின்
நீளம் : 110 நிமிடங்கள்.

தேவைக்கு மட்டுமே எடுக்கவேண்டிய கத்தியை, தேவைக்கு அப்பாற்பட்டு உபயோகிக்காத என்கிறது சவரக்கத்தி.

கதைச்சுருக்கம் :

பிச்சை மூர்த்தி (ராம்) ஒரு நடுத்தர சலூன் கடை முதலாளி, இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் மனைவி சுபத்ரா (பூர்ணா) தற்சமயம் ஒரு நிறைமாத கர்பிணி. சுபத்ராவின் தம்பி ஒரு பெரிய இடத்துப்பெண்ணை காதல் திருமணம் செய்ய கோயிலில் காத்துக்கிடக்க, அவரை குடும்பதோடு பார்க்கச்செல்லும் பிச்சை, கோவக்கார ரவுடி மாங்கேஸ்வரனிடம் (மிஷ்கின்) ஒரு சிறு விவகாரத்தில் சிக்கிக்கொள்ள, பின்னர் நடக்கும் ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களே திரைக்கதை.

பலம் . . .

+ மிஷ்கின் : கதை, திரைக்கதை எழுதியதுடன், அகண்ட விழிகளுடன் மிரட்டும் வில்லன் கதாபாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கிறார். இவர் திரையில் தோன்றும் காட்சிகள் அனைத்தும் ஒரு வித பதற்றம் தொற்றிக்கொள்கிறது.

+ ஒளிப்பதிவு : பெரும்பாலும் மிஷ்கின் கைப்பக்குவதிலேயே நகர்ந்தாலும், கதைக்கு ஏற்றார் போல சிறந்த ஒளிப்பதிவை தந்திருக்கிறார் கார்த்திக் வெங்கட்ராமன்.

+ பூர்ணா : நிறைமாத கர்பிணியாகவும், கெட்ட வார்த்தைகளை வட்டாரவழக்கோடு கோர்வையில் பேசும் காதுகேட்காத பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் பூர்ணா. இவரின் அப்பாவித்தனமான முகபாவனைகள், பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறது.

+இசை : ஆரோல் கோரெல்லி’யின் பின்னணி இசை நன்று. இறுதியில் வரும் சவரக்கத்தி பாடல் கிளைமாக்ஸிற்கு பெரும் பலம்.

பலவீனம் . . .

– திரைக்கதை : சாதாரணமாக 2 காட்சிகளில் சொல்லவேண்டிய விஷயத்தைக்கூட, நீட்டி முழக்கி அரைமணிநேரம் சொல்லும் இழுவையான திரைக்கதை படத்தின் முக்கிய பலவீனம்.

– திணிப்புகள் : இயல்பாகவே எதார்தத்தைக்கொண்ட இப்படத்தின் கதைக்களத்தை மீறிய, நகைச்சுவை திணிப்புகள், படத்தின் பெரும் பலவீனம். படம்நெடுக வரும் செயற்கைத்தனம் நிறைந்த காட்சிகள், படத்தின் சாராம்சத்தை சிதைக்கிறது.

தேவைக்கு அதிகமாக நீளும் காட்சிகளை கொஞ்சம் விட்டு பிடித்திருக்கிறார் எடிட்டர் ஜூலியன். படாத இடத்தில மீண்டும் மீண்டும் அடிவாங்கும் அடியாள், சலூன் கடையில் மாட்டிக்கொள்ளும் அடிமை, நடுரோட்டில் அலையும் பைத்தியக்காரர் ஷாஜி கதாபாத்திரம், கையாலாகாத முரட்டு போலீஸ் கதாபாத்திரம் என்று பல திணிக்கப்பட்ட கதாபாத்திரங்கள். ராம், அவரின் படங்களுக்கேற்றார் போல் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால், இறுதியில் பல இடங்களில் அவரே மனநலம் பாதிக்கப்பட்டவரைப்போல் நடிப்பது, தேவையில்லாத நாடகத்தனம்.

வம்படியாக கருத்து சொல்லவே எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சி கூட ஒரு கட்டத்திற்கு மேல் நாடகத்தனம் மேலோங்கி காட்சி தரவே, படத்தின் மைய்யப்புள்ளி கூட செயற்கைத்தனமாக காட்சியளிக்கிறது.

மொத்தத்தில் : தேவைக்கு அதிகமாக நிதானம் காட்டும் திரைக்கதையும், காட்சி திணிப்புக்களையும் கவனிக்கப்பட்டிருந்தால், சவரக்கத்தி மேலும் கூர்மை பெற்றிருக்கும். மற்றபடி, மிஷ்கின் ரசிகர்களுக்கும், உலகசினிமா ரசிகர்களுக்கும் இப்படம் பிடிக்க வாய்ப்பு அதிகம்.

மதிப்பீடு : 2.5 / 5 . . .

Share