‘எல்.ஐ.சி. கட்டிட படிக்கட்டு முதல் ‘போயஸ் கார்டன்’ வரை

‘எல்.ஐ.சி. கட்டிட படிக்கட்டு முதல் ‘போயஸ் கார்டன்’ வரை

ரஜினியின் சமீபத்திய அரசியல் அறிவிப்பு தொடர்பான கட்டுரையிது. தான் பேசும் மேடைகளில் ‘ஆன்மீக குட்டிக் கதைகள்’ சொல்வது ரஜினியின் வழக்கம். எனவே அவ்வாறானதொரு கதையுடன் இந்தக் கட்டுரையை துவங்குவது பொருத்தமாக இருக்கும்.
ஒரு கதை சொல்லட்டுமா சார்?
**
நிறைய செல்வத்தை சேர்த்து வைத்திருந்தாலும் இனம்புரியாத மனக்குறையை, உள்ளார்ந்த தேடலைக் கொண்டிருந்த ஒரு பணக்காரன் இருந்தான். லெளகீக வாழ்க்கையில் சலிப்புற்ற அவன், தன் மனக்குழப்பத்தை போக்க வேண்டி, தன் செல்வத்தையெல்லாம் ஒரு மூட்டையில் கட்டிக் கொண்டு அந்த ஊரிலேயே புகழ் பெற்றிருந்த சாமியாரைச் சந்திக்கச் சென்றான். அவர் தியானத்திலிருந்து கண்விழிக்கும் வரை காத்திருந்து தன் சிக்கலைச் சொன்னான்.
“ஐயா.. எத்தனை செல்வமிருந்தும் என் வாழ்க்கையில் நிம்மதியில்லை. அதன் மீதிருந்த ஆசையனைத்தும் அழிந்து விட்டது. எல்லாவற்றையும் உங்கள் காலடியில் போட்டு விடுகிறேன். என்னைச் சீடனாக சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்று வேண்டிய அவன், பணமூட்டையை சாமியாரின் காலடியில் வைத்தான்.
“அப்படியா?” என்று அதை கேட்டுக் கொண்ட சாமியார், “நான் சொல்லித்தரும் மந்திரத்தை வைத்து மூன்று நிமிடங்கள் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்” என்றார். பணக்காரனும் அப்படியே செய்தான். மூன்று நிமிடங்கள் கழித்து கண்விழித்து பார்த்தவன் அதிர்ச்சியடைந்தான். சாமியார் மூட்டையை தலைமீது வைத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார். “நாசமாப் போச்சு. இவரைப் போய் நல்லவர் என்று நம்பி வந்தோமே” என்கிற பதட்டத்துடன் ‘திருடன், திருடன், யாராவது அவரைப் பிடியுங்கள்’ என்று கத்திக் கொண்டே அவன் சாமியாரைத் துரத்தினான்.
எத்தனை வேகமாக ஓடியும் சாமியாரைப் பிடிக்கமுடியவில்லை. அத்தனை வேகமாக அவர் ஓடியிருந்தார். விடாப்பிடியாக அவரைத் துரத்திச் சென்ற பணக்காரன் ஓரிடத்தில் நின்று வியப்படைந்தான். தூரத்தில், ஒரு மரத்தடியில் சாமியார் மூட்டையுடன் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார். அவரை அணுகியவன் “ஏன் சாமி ஓடினீங்க?” என்று மூச்சு வாங்க கேட்டான். “நீ செல்வத்தின் மீதிருந்த ஆசையனைத்தும் போய் விட்டது என்றாய். அது உண்மையாக இருந்திருந்தால் நான் பணத்தை தூக்கிக் கொண்டு ஓடிய போது அது குறித்து வருந்தியிருக்க கூடாது. செல்வத்தின் மீதான ஆசை இன்னமும் உன்னிடமிருந்து அறுபடவில்லை. அப்படி அறுபட்டுவிட்டதாக என்றாவது உண்மையாக உணர்ந்தால் அன்று என்னிடம் வா. இப்போது பணத்தை எடுத்துக் கொண்டு செல்” என்றார்.
**
ரஜினிகாந்த் என்கிற நடிகரின் ஆன்மீகத் தேடலை ஒருவகையில் இந்தக் கதையுடன் ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது. லெளகீக வாழ்வின் அத்தனை செளகரியங்களையும் அனுபவித்துக் கொண்டு, பல கோடி ரூபாய் முதலீடுகளில் உருவாகும் திரைப்படங்களின் மூலம் தமிழ்திரையின் முக்கியமான வணிக பிம்பமாக பல காலமாக நீடித்துக் கொண்டு, அவ்வப்போது இமயமலைக்கு சுற்றுலா சென்று வருவதின் மூலமும் அது சார்ந்த குட்டிப் பிரசங்கங்களை செய்வதின் மூலமும் தன்னை ஆன்மீகத் தேடலின் அடையாளமாக சித்தரித்துக் கொள்வது ஒருவகையில் முரண்நகை.
இந்த நகைச்சுவையின் உச்சம்தான் அவர் சமீபத்தில் அறிவித்துள்ள ‘ஆன்மீக அரசியல்’. பாஜக அரசின் மதவாத அரசியலின் இன்னொரு பரிணாமமே, இந்த ‘ஆன்மீக அரசியல்’ என்று ஐயம் கொள்ளக்கூடிய அத்தனை அடையாளங்களும் ரஜினியின் இதுவரையான செயல்பாடுகளில் இருக்கின்றன.
சிவாஜிராவ் என்கிற ரஜினிகாந்த் ‘சூப்பர் ஸ்டாராக’ முன்னகர்ந்த வரலாறு நமக்குத் தெரியும். ஏறத்தாழ எம்.ஜி.ஆருக்கு இருந்த அளவிலான விசுவாசமான ரசிகர் சதவீதம் ரஜினிகாந்திற்கும் உண்டு. ‘இருந்தது’ என்று கடந்த கால பொருளிலும் சொல்லலாம். தொடர்ச்சியான பிரச்சாரங்களின் மூலம் தன் அரசியல் பாதையை கச்சிதமாக அமைத்துக் கொண்டவர் எம்.ஜி.ஆர். குடிப்பழக்கம் இல்லாதவராக, பெண்களை மதிப்பவராக, தாயை தெய்வமாக தொழுபவராக என்று பல்விதங்களில் ‘லட்சியவாத’ பிம்பத்தை வளர்த்துக் கொண்டார். ஆனால் தன் வருங்காலத்தைப் பற்றி எவ்வித தரிசனமும் கவலையும் இல்லாத ரஜினிகாந்த், ‘நடிகரானாலே போதும்’ என்கிற நிலையில் பல்வேறு எதிர்மறை பாத்திரங்களையும் கையாண்டார். வில்லன் பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர், நாயகனாக வெற்றி பெற முடியும் என்கிற அழுத்தமான அடையாளமும் பாதையும் ரஜினியால் சாத்திமாயிற்று.
1995-ல் வெளிவந்து பிரம்மாண்டமான வெற்றியை சுவைத்த ‘பாட்சா’ திரைப்படம், அந்தக் காலக்கட்டத்தில் ரஜினிகாந்த்திற்கு முக்கியமானதாக இருந்தது ஒருபுறம் என்றால் இன்னொருபுறம் தமிழக அரசியலிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் அப்போது தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருந்த வன்முறைச் சம்பவங்களையொட்டி அத்திரைப்படத்தின் வெற்றிவிழா மேடையில் ‘வெடிகுண்டு கலாசாரம்’ பற்றி ரஜினி பேச, ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட கோபத்தினால் ஆர்.எம்.வீரப்பன் தன் அமைச்சர் பதவியை இழந்தார். அதுவரை சினிமா மேடைகளில் அரசியல் பற்றிய கருத்துக்களை தெரிவிக்காமல் இருந்த ரஜினி ‘வெடிகுண்டு கலாசாரம்’ பற்றி பேசியதற்கு பிரதான காரணம், மணிரத்னத்தின் வீட்டில் வீசப்பட்ட வெடிகுண்டு சம்பவமாக இருக்கலாம். ‘பம்பாய்’ திரைப்படத்தின் உள்ளடக்க சர்ச்சையினால் அது நிகழ்ந்தது.
‘சுயநலத்தின் மீது பொதுநலம் உருவாகக்கூடும்’ என்றிருக்கிற விதியின்படி தன்னுடைய நண்பருக்கு நிகழ்ந்த அநீதியை கண்டிப்பதற்காக ரஜினி தந்த ‘வாய்ஸ்’ ஒருவகையில் அவருடைய அரசியல் நுழைவிற்கு விதை போட்டது எனலாம். ஜெயலலிதாவிற்கும் ரஜினிக்கும் இடையே மறைமுக போர் துவங்கியது. தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் வந்த நேரத்தில் ‘ஜெயலலிதா முதல்வரானால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்று ரஜினி தந்த ஆவேசமான பேட்டி அப்போதைய தேர்தலில் அதிமுகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் புதிதான உருவான கட்சியான த.மா.கவுடன் கூட்டணி வைத்த தி.மு.க அமோக வெற்றியைப் பெற்றது. ஆனால் இந்த வெற்றி ரஜினியால் மட்டுமே கிடைத்தது என்று சொல்ல முடியாது. பல்வேறு காரணங்களால் ஜெயலலிதா ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு அலையின் மீது நெருப்பைத் தூவியது மட்டுமே ரஜினியின் செயல்.
ஒருவரின் அரசியல் பங்களிப்பு என்பது சிறந்த கொள்கைகளினாலும் நிதானமாக சிந்தித்து உருவாக்கப்பட்ட தொலைநோக்குத் திட்டங்களினாலும் அமைய வேண்டியதொன்று. ஆனால் உணர்ச்சி வேகத்தில் ரஜினி எடுக்கும் முடிவுகளினால் அவர் தன்னிச்சையாக சில அலைகளுக்குள் சென்று விழுவதைப் பார்க்கும் போது அவருக்கென்று அரசியல் பார்வையோ, எந்தவொரு கருத்திலும் நிலையான உறுதியோ இருப்பது போல் தெரியவில்லை. திரைத்துறையினர் நிகழ்த்தும் போராட்டங்களில் மட்டும் கலந்து கொண்டிருந்த ரஜினி, தன் திரையுலகப் பயணத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு ஜாக்கிரதையாக நடந்து கொண்டார். எந்த ஜெயலலிதாவை கடுமையாக எதிர்த்தாரோ, அவரையே பிற்பாடு நிகழ்ந்த ஒருவிழாவில் ‘தைரியலட்சுமி’ என்று புகழவும் அவர் தயங்கவில்லை. ‘பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்’ என்கிற அணுகுமுறையை இரு திராவிடக்கட்சிகளிடமும் ஜாக்கிரதையாக கடைப்பிடித்தார்.
**
‘1996-ல் ரஜினி எடுத்திருக்க வேண்டிய முடிவு இது, அப்போது வந்திருந்தால் ஆட்சியைப் பிடித்திருக்கலாம்’ என்பது ரஜினியின் அரசியல் வெற்றி குறித்து பெரும்பாலோனோரின் அபிப்ராயமாக இருக்கிறது. ஆனால் அப்போது ஜெயலலிதா மீதான அவருடைய கோபம், குறிப்பிட்ட பிரச்சினைக்காக வெளிப்பட்டதே ஒழிய, மக்களின் பொதுநலனுக்காக இல்லை என்பதை கவனிக்க வேண்டும். அவருடைய கோபம், திமுகவிற்கு சாதகமாக அமைந்தது துரதிர்ஷ்டம்.
தன்னுடைய அரசியல் வருகை குறித்தான தெளிவான துல்லியமான அறிவிப்பை அவர் வெளியிடாமல் பல வருடங்களாக குழப்பத்தையே ஏற்படுத்திக் கொண்டிருந்ததால் அவர் மீதான நம்பகத்தன்மை கணிசமாக குறைந்தது. அவருடைய ‘வாய்ஸ்’ பிறகான தேர்தல் சமயங்களில் மக்களிடையே எடுபடாமல் போனதை கவனிக்கலாம்.
கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாத சமகால தமிழக அரசியல் சூழலில் உள்ள வெற்றிடத்தை கைப்பற்றும் முயற்சியில் பலரும் ஈடுபடும் வரிசையில் ரஜினியும் முண்டியடிக்க முயன்றிருப்பது துரதிர்ஷ்டம். குழப்பவாதியோ எனும் புகாரோடு சந்தர்ப்பவாதி எனும் குற்றச்சாட்டையும் அவர் மீது வைப்பதற்கான முகாந்திரத்தை இது ஏற்படுத்துகிறது.
அரசியலில் நுழைவதற்கான அடிப்படையான விருப்பம் அவருக்கு இல்லாவிடினும் பல்லாண்டு கால ரசிகர்களின் எதிர்பார்ப்பும் நெருக்கடியும் இந்த முடிவிற்கு அவரைத் தள்ளியிருக்கலாம். அவருடைய தீவிரமான ரசிகர்கள் தவிர, பொதுவான ரசிகர்களின் சதவீதம் மெல்ல குறைவதை அவருடைய சில திரைப்படங்கள் வணிகரீதியாக தோல்வியடைந்து வருவதின் மூலம் உணர முடியும். ஏதாவது ஒரு அதிரடியை செய்து தன் திரையுலக இருப்பை, செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக இதைக் கருத முடியும்.
அவருடைய சில ரசிகர்களும் ‘அரசியல்வாதிகளாக’ மாறத் துடிப்பது சமூக நலனிற்காக அல்ல. இதர கட்சிகளின் ‘மாவட்டங்கள்’ அடையும் ஆதாயங்களையும் செல்வாக்கையும் தாமும் அடைய முடியாதா என்கிற தவிப்பே. ‘வந்து தொலையேன்’ என்கிற எரிச்சலை அவர்களுக்குள் ஏற்படுத்துகிறது. பல வருடங்களாக வெறுமனே கட்அவுட்டிற்கு பால் ஊற்றிக் கொண்டிருக்க அவர்கள் என்ன முட்டாள்களா?
என்னுடைய அவதானிப்பின் படி அடிப்படையில் ரஜினி நேர்மையாளர். தன்னுடைய திரை வணிகத்தில் அதன் சூதாட்டங்களுக்கேற்ப தன்னை திறமையாக தக்க வைத்துக் கொண்டிருக்கிற புத்திசாலி என்றாலும் சமூகத்தின் இழிவுகள் குறித்தும் அரசியல் கட்சிகளின் மெத்தனங்கள் குறித்தும் அவருக்குள் உண்மையாகவே கவலைகள் இருக்கின்றன. அரசியல் அதிகாரத்தின் மூலம் இதை சரிசெய்ய முடியும் என்றாலும் தன்னால் வெற்றியடைய முடியுமா? ‘நாய் நாயைத் தின்னும் இழிவான அரசியலில் தன்னால் நிலைக்க முடியுமா?” என்றெல்லாம் தயங்க வைத்தது அவருக்குள் இருந்த அடிப்படையான அறவுணர்வு.
இவ்வகை மென்மையான ஆசாமிகளால் அரசியலில் நீண்ட காலம் தாக்குப் பிடிக்கவே முடியாது. அரசியல் முடிவிற்கே இத்தனை தாமதம் செய்தவர், நாளை அதிகார அரசியலுக்குள் நுழைந்து எல்லாவற்றிற்கும் இதே போன்று எல்லா முடிவுகளுக்கும் தாமதமும் குழப்பமும் செய்தால் அது ஆபத்தாகவே முடியும். இந்த நோக்கில் அவர் வெற்றியடையாமல் இருப்பதே தமிழகத்திற்கு நல்லது. ஒருவேளை ரஜினி என்கிற தனிநபர் நேர்மையாளராக இருந்தாலும் அவரைச் சுற்றியுள்ள கூட்டம் அப்படி இயங்க அனுமதிக்காது.
எனில் ரஜினி என்ன செய்யலாம்?
கிளிஷேவாக இருந்தாலும் அரசியல் என்பது சாக்கடைதான். ஒருவகையில் ‘மாற்றத்தை’ எதிர்பார்க்கும் தமிழக மக்களிடம், நேர்மையாளர்களை மலினமாக பார்ப்பது என்பது அடிப்படையிலேயே இருக்கிறது. எம்.எஸ். உதயமூர்த்தி, டிராபிக் ராமசாமி போன்று சமூகத்தில் நேர்மையாளராக அறியப்படுபவர்களின் தேர்தல் தோல்வி இதையே சுட்டிக் காட்டுகிறது. எனவேதான் அவ்வாறானவர்களும் ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரும் அரசியலுக்குள் வர தயக்கம் கொள்கிறார்கள். உண்மையாகவே சமூக நலனிற்கு பயனுள்ளவராக இருப்பவர்களை அடையாளம் கண்டு ஒருங்கிணைத்து அவர்களின் வெற்றிக்கு பின்னால் நின்று உதவுதே ரஜினியால் செய்யக்கூடிய ‘குறைந்தபட்ச’நல்ல அரசியலாக இருக்கும்.
**
சினிமாவிற்காக வாய்ப்பு தேடி அலைந்த துவக்க காலங்களில் ‘ஒருமுறை இரவில், எல்.ஐ.சி. கட்டிடடத்தின் படிக்கட்டில் தூங்கினேன்’ என்பது ரஜினியின் அனுபவப் பகிர்வு. பிற்காலத்தில் சூப்பர் ஸ்டாராக பரிணமித்து அவர் வசதி வாய்ப்புகளுடன் போயஸ் கார்டன் சென்றடைவார் என்பதை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். இந்தப் பயணம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை அடையக்கூடும் என்று கனவு காணும் உரிமை, அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இருக்கிறது.
நீண்ட கால மெளனத்தைக் கலைத்து தன்னுடைய அரசியல் வருகை அறிவிப்பின் போது கூட தன் தரப்பின் கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் தெளிவாக அறிவிக்காமல் இன்னமும் குழப்பவாதியாகவே நீடிக்கிற ரஜினி ஒருவேளை அதிகார அரசியலில் வெற்றி பெற்றால் “அவர் நம்பும் ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது’. அவருடைய பிரபலமான பஞ்ச் வசனத்தை அவருக்கே சொல்ல நேர்ந்திருப்பது துரதிர்ஷ்டம்தான்.
திரையரங்க கட்டணங்களின் உயர்வு, கேன்டீன்காரர்களின் கொள்ளை, அநியாயமான பார்க்கிங் கட்டணம், தன் திரைப்படத்தின் துவக்க நாள் அனுமதிச்சீட்டுகள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அதிக லாபத்துடன் கைமாறும் அவலம் போன்றவை குறித்து இதுவரை ரஜினி வாயைத் திறந்தது இல்லை. தான் இயங்கும் துறையிலேயே எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த முனையாதவர், சமூக மாற்றத்தைக் குறித்து கனவு காண்பது முறையானதா?

 

– சுரேஷ் கண்ணன்

 

 

Share