மேயாத மான் – படம் எப்படி ?

மேயாத மான் – படம் எப்படி ?

இயக்கம் : ரத்ன குமார்.

நடிப்பு : வைபவ்

        ப்ரியா பவனி ஷங்கர்

        இந்துஜா

        விவேக் பிரசன்னா

        அருணபிரசாத்

        நித்யராஜ்

ஒளிப்பதிவு : வித்யு அய்யன்

எடிட்டிங் : ஷபிக் முஹம்மத் அலி

இசை : சந்தோஷ் நாராயணன்

         பிரதீப்

தயாரிப்பு : கார்த்திகேயன் சந்தானம்

            கார்த்திக் சுப்புராஜ்

நீளம் : 147 நிமிடங்கள்

 

ஒரு தலை காதலில் சிக்கித்தவிக்கும் அண்ணன்-தங்கையின் பாசப்பிண்ணனியை கொண்ட காதல் மான் இந்த மேயாத மான்.

 

கதைச்சுருக்கம் : இசை கச்சேரி குழு நடத்தும் முரளி (வைபவ்), தனது ஒரு தலைகாதலியான மதுமிதாவிற்கு (ப்ரியா பவனி ஷங்கர்) நிச்சயமானதை எண்ணி விரக்தியில் அலைகிறான், அச்சமயம் அவளது தங்கை சுடர்விழி (இந்துஜா) தன் நண்பன் வினோத்தை (விவேக் பிரசன்னா) ஒருதலையாக காதலிக்கும் விஷயத்தை தன் தங்கையின் மூலமே அறிகிறான், பின்னர் நடக்கும் சம்பவங்களின் திரைக்கதை, இவ்விரு காதலில் விதிகளை தீர்மானிக்கிறது.

 

முரளியின் தற்கொலை படலத்தில் துவங்கும் ஆரம்ப காட்சிகளில் தொற்றிக்கொள்ளும் ஈர்ப்பு, பின்னர் வரும் காட்சிகளில் குறையத்தொடங்க, நீளமான இடைவேளை காட்சி நம்மை கட்டிபோடுகிறது. இரண்டாம் பாதியின் ஊடல்-கூடல் காட்சிகள் நம்மை சுவாரஸ்யப்படுத்த, நாம் எதிர்பார்க்கும் முடிவை, எதிர்பாராத விதத்தில் விருந்திட்டு முடிகிறது படம்.

 

பலம் . . .

 

+ கதாபாத்திர வடிவமைப்பு : முரளி, மதுமிதா, சுடர், வினோத் என்ற நான்கு கதாபாத்திரங்களின் வடிவமைப்பும், கதாபாத்திர தேர்வும் நச். புதுமுகமான பிரியா மற்றும் இந்துஜா இருவரும் படத்தை தாங்கி பிடிக்கிறார்கள். வைபவின் நண்பனாக வரும் அருணபிரசாத், மெக்கானிக் கடை பையனாக வரும் நித்யராஜ் ஆகியோர் முத்திரை பதிக்கிறார்கள்.

 

+ வசனங்கள் : படம்நெடுக வசனங்கள் இயல்பாகவே திரையில் பகிரப்படுவதோடு, இயற்கையாக இழையப்பட்ட காமெடி சிறப்பு.

‘காதலும் கூந்தலும் ஒன்னு …’, ‘வைத்துக்கே பிரச்சனைன்னு இருக்கும்போது, வயித்துக்கு மேலயும் கீழயும் எப்படி யோசிக்கிறது’ போன்ற வசனங்கள் மிளிர்கின்றது.

 

+ இசை : தாளம் போட வைக்கும் பாடல்கள், துள்ளலான பின்னணி இசை என்று படத்தை வேறு கட்டத்திற்கு கொண்டு செல்கிறது  சந்தோஷ் நாராயணன்,பிரதீப் ஆகியோரின் இசை.

 

பலவீனம் . . .

 

– முதல் பாதி : முதல் 20 நிமிடங்களை தவிர்த்து, இடைவேளை வரை திரைக்கதை மெதுவாகவே நகர்கிறது, திரும்ப திரும்ப வரும் தற்கொலை புலம்பல்களோடு, ஒரு சில காட்சிகளின் நீளமும் சற்று சலிப்பு தட்ட வைக்கிறது, படத்தொகுப்பாளர் சபிக் முஹம்மத் இதை கவனித்து இருக்கலாம்.

 

– சில கேள்விகள் :

* படம் முழுக்க பல வித்தியாசங்களை கையாண்ட இயக்குனர், இரண்டாம் பாதியில் வரும்  வழக்கமான டாஸ்மாக் பாடலை வைத்ததன் கட்டாயம் என்ன?.

* மதுமிதா’வின் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பதில் அவசரம் காட்டிவிட்டாரா அவரின் தந்தை?. அவரின் நடவடிக்கைகள் செயற்கையாகவே தென்படுவது ஏன்?.

 

ஆரம்பத்தில் கொஞ்சம் ஒட்டாமல் தெரிந்தாலும், இடைவேளைக்கு பின் திரையில் பெரிதாக மிளிர்கிறார் வைபவ். ‘காதல் தோல்வியின் புலம்பல்களில் பிறக்கும் ஒரு காதல் கதை’, என்ற வித்யாசமான கதையை, மிகவும் வித்யாசமாக கையாண்டு அனைவரின் கவனத்தையும் கவர்கிறார் இயக்குனர் ரத்ன குமார். ஆரம்ப காட்சி துவங்கி இறுதிவரை மேலோங்கும் காமெடி, படத்திற்கு பெரிய பலம். கார்த்திக் சுப்புராஜின் முதல் தயாரிப்பான இப்படம் கண்டிப்பாக முத்திரை படித்து இருக்கிறது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

 

மொத்தத்தில் : ஆரம்பத்தில் ஏற்படும் சில தொய்வுகளை, பிற்பாதி காதல் மற்றும் காமெடி காட்சிகளால் தூக்கிநிறுத்தும் இந்த மான், உங்களை நிச்சயம் கவரும்.

Santhosh AVK

Share