கடுகு படம் எப்படி?

கடுகு படம் எப்படி?

நடிகர்கள் : பரத், ராஜகுமாரன், ராதிகா பிரசித்தா, சுபிக்ஷா
கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் : விஜய் மில்டன்
தயாரிப்பு : பரத் சீனி, விஜய்மில்டன்
தயாரிப்பு நிறுவனம்: ரஃப் நோட் ப்ரொடக்ஷன்
வெளியீடு : சூர்யா, 2D என்டர்டெயின்மென்ட்
இசை : S.N. அருணகிரி
பின்னணி இசை : அனூப் சீலின்
படத்தொகுப்பு : J.R. ஜான் ஆப்ரகாம்
கலை : R. ஜனார்த்தனன்
ஸ்டண்ட் : சுப்ரீம் சுந்தர்
வெளியீட்டு நாள் : 24-03-2017
தணிக்கை சான்றிதழ் : U
கால அளவு : 1 மணி 55 நிமிடங்கள்
படவகை : டிராமா

கதை :
ராஜகுமாரன் ஒரு புலிவேஷம் ஆடும் கலைஞன். உதவும் உள்ளம் கொண்டவர். பரத் ஊரில் ஒரு பெரும்புள்ளி. பாக்சிங் தெரிந்தவர். ஒருநாள் சபலபுத்தி கொண்ட அமைச்சர் பரத் ஊருக்கு வருகிறார். அவர் வருகைக்காக பள்ளிக்குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அமைச்சர் வந்தவுடன் என்ன நடக்கிறது என்பதே தொடரும் எஞ்சிய கதை.

நிறை :
இயக்குநர் விஜய் மில்டனின் கதையமைப்பு யதார்த்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இருப்பதால் எளிதில் படத்துடன் ஒன்றிப்போக முடிகிறது. அவரின் கூர்மையான கருத்துமிக்க வசனங்கள் கைத்தட்டல் பெறும் அளவுக்கு நன்றாக இருக்கிறது. படத்தில் அவர் சொல்லிருக்கும் கருத்து சமுதாயத்துக்கு தற்போது தேவையான ஒன்று. பண்பார்ந்த ஒளிப்பதிவும் கண்ணுக்கு இனிமை. குறிப்பாக படத்தில் வரும் சில “சிங்கள் ஷாட்ஸ்”. ராஜகுமாரனின் நடிப்பு பாராட்டுக்குரியது. அதேநேரம் அந்த கதாபாத்திரம் இந்த படத்தில் தனி முத்திரை பதிக்கிறது. அவர் நண்பனாக நடித்திருப்பவர் மனதில் நிற்கிறார். பரத் ஒரு இடைவெளிக்குப் பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அழகு. வில்லனா ஹீரோவா என்று சொல்ல முடியாத அளவுக்கு அவரின் கதாபாத்திர வடிவமைப்பு, அழகாக நடித்திருக்கிறார். அனூப் செலினின் பின்னணி இசை நன்று. “கோலிசோடா தீம்” இதில் நன்றாக பொருந்தி இருக்கிறது. கலை இயக்குநர் ஜனார்த்தனனின் அரங்க அமைப்பு நம்பகத்தன்மையோடு இருந்தது குறிப்பாக காவல் நிலையம். ராஜகுமாரனுக்கும் பரத்துக்கும் இடையே நடக்கும் புலிவேஷ சண்டைக்காட்சிகளில் சுப்ரீம் சுந்தர் தெரிக்கிறார். இயக்குநரின் சவால்கள் நிறைந்த இந்த கதை போற்றுதலுக்குரியது. இயக்குநர் படத்தின் பிற்பகுதியில் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார். துணை கதாபாத்திரங்களும் கதைக்கேற்ப கச்சிதமான வடிவமைப்பு. கிளைமாக்ஸில் சொல்லப்படும் கருத்து சமத்தான திருப்பம்.

குறை :
தயாரிப்பில் சிக்கனம் காட்சிகளில் தெரிவதால் தரமும் வீழ்கிறது. சுபிக்ஷாவின் கதாபாத்திரம் இந்த கதைக்குள் பொருந்தாமல் தனித்து இருப்பதால் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. திரைக்கதையின் முன்பாதி சற்று மெதுவாக செல்வதால் சற்று தொய்வு. கதாபாத்திரங்களை நிலைநிறுத்த நேரம் எடுத்துக்கொண்டதால் சில காட்சிகள் சோர்வை ஏற்படுத்துகின்றன. ராஜகுமாரனின் புலித்தாவல் செயற்கையாக இருப்பது கண்கூடு. S.N. அருணகிரியின் பாடல்கள் சுமார் ரகம், அதுவும் பொருத்தமான இடத்தில் அமையவில்லை. முதல் பாதியில் நகைச்சுவை காட்சிகள் ஓரளவே எடுபடுகிறது. ஜான் ஆப்ரகாமின் படத்தொகுப்பும் சராசரி தான். இன்னும் படத்தை அழகுபடுத்தி இருக்கலாமோ என்ற ஆதங்கம் எழுகிறது. முகநூல் காதல் நகைச்சுவையும் வசனங்களும் இந்த கதைக்களத்துக்கு ஒரு இடைச்செருகலாகவே தோன்றுகிறது. இக்கதைக்கு தணிக்கை சான்றிதழ் ‘யூ’ கொடுத்திருப்பது கேள்விக்குறிதான்.

கருத்து: நச்சென்ற வசனத்துடன் கூடிய நல்ல கருத்துள்ள கதை. அதன் தாக்கத்தை சற்றே விறுவிறுப்பு குறைந்த திரைக்கதை தடுக்கிறது.

Share