யாக்கை – படம் எப்படி?

யாக்கை – படம் எப்படி?

நடிகர்கள் : கிருஷ்ணா, சுவாதிரெட்டி, பிரகாஷ்ராஜ், குருசோமசுந்தரம்
கதை, திரைக்கதை, இயக்கம் : குழந்தை வேலப்பன்.
வசனம் : பாஸ்கர் சக்தி
தயாரிப்பு : முத்துக்குமரன்
தயாரிப்பு நிறுவனம் : ப்ரைம் பிக்சர்ஸ்
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு : சத்யா பொன்மார்
படத்தொகுப்பு : V.J. சாபு ஜோசப்
ஸ்டண்ட் : திலீப் சுப்பராயன்.
வெளியீட்டு நாள் : 03-03-2017
தணிக்கை சான்றிதழ் : U
காலஅளவு : 2 மணி 7 நிமிடங்கள்
படவகை : ரொமாண்டிக் த்ரில்லர்

கதை
H+ ஆஸ்பத்திரியின் முதலாளி ராதாரவி மர்ம நபரால் கொல்லப்பட தற்கொலை என்று வழக்கு பதிவாகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜ். கொலையாளியை தனியே தேடும் குருசோமசுந்தரம் ராதாரவியின் மகன். கிருஷ்ணாவும் சுவாதியும் ஒரே கல்லூரியில் படித்த காதலர்கள். ராதாரவி கொலையில் அவர்கள் எப்படி தொடர்பு படுத்தப்படுகிறார்கள். யார் உண்மையான கொலையாளி என்பதே திரைப்படத்தின் ஓட்டம்.

நிறை
பிரகாஷ்ராஜ் தன் இயல்பான நடிப்பில் கதாபாத்திரத்திற்கு மெருகேற்றியதால் காட்சிகளும் உயிரோட்டம் பெறுகின்றன. அழகு மிளிரும் சுவாதியின் கதாபாத்திரம் அவர் நடித்த படங்களில் சிறந்தது என்றே சொல்லலாம். பாஸ்கர் சக்தியின் வசனம் குறிப்பாக மருத்துவத்துறை சார்ந்த வசனங்கள் தெறிக்கின்றன. யுவனின் இசையில் பாடல்கள் மிக நேர்த்தி, அதிலும் தனுஷ் பாடிய “தானா போன காதல்” தனித்துவம். பின்னணி இசை படத்திற்கு மேலும் வலிமை சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் சத்யா பொன்மார் படத்திற்கு தேவையான காட்சிகளை அழகாக எளிமையாக படம்பிடித்து இருக்கிறார். ஸ்டண்ட் திலீப் சுப்பராயன் படத்துக்கான தனது பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறார். இடைவேளை வரை பார்க்க இனிமை. காதல், புலனாய்வு காட்சிகளெல்லாம் ரசிக்கலாம். மருத்துவமனைகளின் தற்போதய யதார்த்த நிலையை வெளிப்படையாக காட்டியதற்காக இயக்குநருக்கு ஒரு “ஓ” போடலாம். உணர்ச்சிவசப்படும் கிளைமாக்ஸ்.

குறை
தேவையில்லா திருப்பங்கள் அடங்கிய பழைய கதை, இரண்டு வெவ்வேறு தடத்தில் பயணிக்கும் கதைகளை இணைப்பது ஏனோ எடுபடவில்லை. பிற்பகுதியில் திரைக்கதை திசைமாறி ஒரு அர்த்தமில்லா முடிவை நோக்கி போவதாக அமைந்துவிடுகிறது. படம் முழுவதும் கிருஷ்ணாவின் மிகை நடிப்பு, மிடியல…. தனது நடிப்புத்திறமையை அவர் செம்மை ஆக்கவேண்டும். முதல்பாதியில் வரும் மாற்றுத்திரனாளிகளின் காட்சி கதையோட்டத்துக்கு பயனில்லை. மிகையான காட்சிகள், இரண்டாம் பாதியில் தேவையற்ற காதல் காட்சிகள், டூயட் போன்றவை இழுவை. குருசோமசுந்தரத்தின் பண்புருவாக்கம் வலுவற்று இருப்பது திரையில் அவர் காட்சிகளே சாட்சி. படத்தொகுப்பாளர் தேவையற்ற காட்சிகளின் மீது கருணை காட்டாமல் இருந்திருக்கலாம். ராதாரவி, சிங்கம்புலி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரின் பாத்திரங்களும் தாக்கத்தை உண்டாக்காதது ஏமாற்றமே. நல்ல காட்சிகள் கூட லாஜிக் குளறுபடியால் சோபிக்கவில்லை. நகைச்சுவை காட்சிகளில் காணாமல் போனது நகைச்சுவை. ராதாரவியின் பிளாஷ்பேக் காட்சிகள் மையக்கதைபோடு சரிவர இணைக்கப்படவில்லை.

கருத்து: இது ஒரு மருத்துவப் பின்னணியை பளுவாகக்கொண்ட சிலிர்க்காத விறுவிறுப்புபடம்.

மதிப்பீடு :
2.50/5

Share