‘சென்னை 28 II’ படம் எப்படி ?

‘சென்னை 28 II’ படம் எப்படி ?

ஒரு படத்தின் தொடர்ச்சியாக இன்னொரு படத்தை எடுப்பது சாதாரணமான விஷயமில்லை. ’FIRST PART  மாதிரி இல்லியே’, ‘இதுக்கு  அதுவே பரவாயில்ல’ என்பது போன்ற விமர்சனங்கள் முந்திக்கொண்டு தலைகாட்டும் அபாயமே இதற்குக் காரணம். ஆக்‌ஷன் படங்களின் அடுத்தடுத்த SEQUELகளை அள்ளிவிடும் ஹாலிவுட் ஜாம்பவான்கள் கூட, ஜாலியான படங்களின் அடுத்த பாகத்தை வெளியிட தயங்குவார்கள்..அது ஒருபுறமிருக்க இங்கே தமிழில் வெளிவந்த படங்களில் SEQUELS மிகவும் குறைவு… பில்லா, சிங்கம், எந்திரன் போல தமிழில் வெற்றி பெற்ற ஒரு படத்தின் அடுத்த பாகம் வெளியாகாதா என்று நம்மவர்கள் நினைப்பதுண்டு அந்த வகையில் 10 ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கிறது சென்னை 28. முதிலில் ஆதிக்கு செல்வோம்…
Chennai 600028 …
ஆண்டுமுழுதும் எத்தனையோ படங்கள் வெளிவந்தாலும் வெகுசில படங்களே தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக்கொள்கின்றன… ஏன் அதன் இயக்குனர்களுக்கும் கூட..
அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சென்னை 28… ஜெய், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், விஜய் வசந்த் என ஒவ்வொரு துளியாக சேர்த்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிறு படமாக துவங்கி யுவனின் இசை மூலம் கவனம் ஈர்த்தது… எளிமையாக வெளியாகி இளைஞர்கள் மூலம் கிடைத்த வரவேற்பால் அபார வெற்றி பெற்றது…
நம் வீட்டின் தெருமுனையில், டீக்கடைகளில் லூட்டியடிக்கும் இளைஞர்களை அப்படியே திரையில் காட்டிய அந்த நேட்டிவிட்டியே படத்தின் மிகப்பெரும் பலமாக இருந்தது… அது மட்டுமில்லாமல் பிரவின் KL, ஷ்ரீகாந்த் NB என்ற இரு திறமைவாய்ந்த எடிட்டர்களையும் (ஆரண்ய காண்டம் – தேசியவிருது), சக்தி சரவணன் என்ற அற்புதமான கேமிராமேனையும் அறிமுகப்படுத்தியது… (மங்காத்தா மிகச்சிறந்த உதாரணம்) சரோஜா சாமானிகாலோ சென்னை தாண்டி கிராமம் வரை குத்தாட்டம் போட வைத்தது…
ரேடியோ மிர்ச்சி கப் 2006 இல் ராயபுரம் ராக்கர்ஸ் அணியை அரையிறுதில் வென்று, ஏற்கனவே பீச் மேட்சில் மண்ணை கவ்விய BADBOYS அணியுடன் இறுதி போட்டியில் பல்ப் வாங்குவதாக முதல் பாகம் முடிகிறது….
இது வரலாறு….
Chennai 600028 II: Second Innings
அதற்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து ஒவ்வொருவரும் குடும்பம், குழந்தைகள் என செட்டில் ஆகிவிட ஜெய்யின் திருமணம் மூலம் மீண்டும் இணைகிறார்கள்…
திருமணம் தேனியில் முடிவாக கதை தேனிக்கு செல்கிறது… சென்னையிலிருந்து தப்பி ஓடிய அரவிந்த் ஆகாஷ் தேனியில் ஒரு அணியில் கிரிக்கெட் ஆடுகிறார். அவருக்கு உதவ மீண்டும் தேனியில் விளையாடுகிறார்கள். இதனால் அந்த ஊரின் தாதாவன வைபவின் பகையால் திருமணம் நின்று போகிறது… ஜெய்யின் காதலும் முறிந்து போகிறது…இதனால் மணமடைந்து தமிழகத்தை விட்டே கிளம்ப நினைக்கும் ஜெயை அவரது காதலியுடன் மீண்டும் சேர்த்து வைக்க நண்பர்கள் மீண்டும் தேனிக்கு வருகிறார்கள். அங்கே மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதுடன், போட்டியில் வெற்றி பெற்றால் தான் ஜெயை அவரது காதலியுடன் சேர்த்து வைக்க முடியும், என்ற நிலையும் ஏற்படுகிறது… இறுதியில் அவர்கள் போட்டியில் வெற்றி பெறார்களா இல்லையா, ஜெய் தனது காதலியை கரம் பிடித்தாரா இல்லையா, என்பது மீதிக்கதை…
சென்னையின் இண்டு இடுக்கு, சந்து பொந்து என்று முதல் பாகத்தில் சென்னையில் எங்கெல்லாம், எப்படியெல்லாம் கிரிக்கெட் விளையாடுவார்கள் என்று காட்டிய இயக்குனர், இந்தமுறை தேனிப்பக்கம் தாவியிருப்பது புது வெரைட்டி… படத்திற்கு புது ஃப்லேவர் கொடுத்த இயக்குனருக்கு நன்றி… அதே போல் ஒவ்வொரு நண்பர்கள் வாழ்க்கையிலும் திருமணம் எப்படி அவர்களது நட்புவட்டத்தை உடைக்கிறது என்பதையும் மிக அழகாக பதிவு செய்துள்ளார்… பெற்றோருக்காக கிரிகெட்டை இழந்தோம். மனைவிக்காக நண்பர்களை இழக்கிறோம் என நிதின்சத்யா கண்ணீருடன் பேசும் ஒருகாட்சி மிகச்சிறந்த உதாரணம்…
இப்படத்தின் மிகப்பெரிய பலம் முதல் பாகத்திலிருந்த பெரும்பாலான நட்சத்திரங்களை இதிலும் பயன்படுத்தி, அதோடு சில  சுவாரஸ்யமான புதிய கேரக்டர்களையும் அறிமுகம் செய்து அனைவரையும் சரியாகப் பயன்படுத்தியிருக்கும் வெங்கட்பிரபுவின் இயக்கம் தான். மேலும் முதல்பாகத்தில் இருந்த விளையாட்டுத்துறை அமைச்சரிலிருந்து, பேட் பாய்ஸ் அணியிலிருந்து, கோபியின் கிரிக்கெட் பேட் வரை இதிலும் இணைத்திருப்பது மெர்சல் ரகம். முதல் பாகம் இளைஞர்களுக்கு என்றால் இரண்டாம் பாகம் கொஞ்சம் குடும்பங்களும் பார்க்கும் ரகம்… குடிக்கும் காட்சிகள் குறைத்திருக்கலாம்… DRINKING CARD ரொம்ப நேரமாக ஒரு மூலையிலேயே இருக்கு…
படத்தின் மிகப்பெரும் இன்னொரு பலம் வசனம்… பல இடங்களில் டைமிங் காமெடி அள்ளி வீசுகிறார் சிவா… அதை விட முக்கியமாக சிரிக்க வைக்கிறார்… மிர்ச்சி சிவாவுக்கு இது மிகச் சரியான கம்பேக் படம்… ரிவ்யூ கொடுக்கும் பிரசாந்த், நீலசட்டை எல்லாரையும் கிளித்து தொங்கவிட்டிருக்கிறார்கள்… படம் முழுக்க வயிறு குலுங்க சிரிப்பு மினிமம் கேரண்டி…
ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் தேனி மற்றும் கிரிக்கெட் காட்சிகள் கண்களுக்கு விருந்து. படத்தின் முதுகெலும்பு எடிட்டிங்… விறுவிறுவென செல்லும் இரண்டாம் பாதியில் முக்கியமாக கிரிக்கெட் போட்டியில் எடிட்டிங் படு ஷார்ப்… 2.45 நிமிட பெரிய படம் இது என்றாலும் துளியும் போரடிக்கவில்லை… சொப்பன சுந்தரி ஹிட் பாடல் உட்பட படம் முழுக்க யுவனின் இசை பயணிக்கிறது… முக்கியமாக இரண்டாம் பாதி கிரிக்கெட் காட்சிகளில் படத்தொகுப்பும் இசையும் சிறப்பான கோர்வை…
இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் யாரும் எதிர்ப்பார்க்காத ட்விஸ்ட்… !!!!!
ஏற்கனவே சொன்னது போல இது முந்தைய பாகத்தை விட சிறப்பா இருக்கா இல்லியா என்பதை தாண்டி, நீண்ட நாட்களுக்கு பிறகு செம்ம ஜாலியாக ஒரு கதைக்களம், அதற்கு திரைக்கதை அமைத்த விதம் சிறப்பு .ஜெய், சிவா, விஜய் வசந்த் என அனைவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்த ஒரு கம்பேக் காம்போ… அவசியம் பார்க்க வேண்டிய படம்… நம்பி வாங்க சந்தோசமா போங்க…
மூன்றாம் பாகத்திற்காக காத்திருக்கோம்…
– கௌதம் GA –
Share